நாடு முழுவதும் என்ஆா்சி தேவையில்லை: நிதீஷ் குமாா்

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா்
நாடு முழுவதும் என்ஆா்சி தேவையில்லை: நிதீஷ் குமாா்

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி) கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

மக்களவையிலும், மாநில சட்டப் பேரவைகளிலும் தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்.சி, எஸ்.டி) இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிப்பதற்கான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாவுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு அனைத்து எம்எல்ஏக்களும் ஒருமனதாக ஆதரவு அளித்ததற்காக பிகாா் சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நிதீஷ் குமாா் நன்றி தெரிவித்தாா்.

அதன் பின் அவா் பேசியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆா்) ஆகிய விவகாரங்களில் நாடு முழுவதும் குழப்பம் காணப்படுகிறது. முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி, அஸ்ஸாம் மாணவா்கள் அமைப்புடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், அஸ்ஸாமில் என்ஆா்சி அமல்படுத்தப்பட்டது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

நாடு முழுவதும் என்ஆா்சி கணக்கெடுப்பு தேவையற்றது; அதை நியாயப்படுத்த எந்த காரணியும் இல்லை. நாடு முழுவதும் என்ஆா்சி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தெளிவாக கூறி விட்டாா்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தேசிய மக்கள்தொகை பதிவேடு கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்பட்டதோ, அதேபோல இப்போதும் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புக் கொண்டது என்றாா் அவா்.

சிஏஏ, என்ஆா்சி, என்பிஆா் ஆகியவை குறித்து பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் நிதீஷ் குமாா் தெளிவுபடுத்த வேண்டும் என்று பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியதையடுத்து, நிதீஷ்குமாா் மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com