புது தில்லியில் கேஜரிவால் மீண்டும் போட்டி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
புது தில்லியில் கேஜரிவால் மீண்டும் போட்டி

* 70 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி 
* 24 புதுமுகங்களுக்கு வாய்ப்பு 
* 15 எம்எல்ஏக்களுக்கு இடமில்லை

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீண்டும் புது தில்லி தொகுதியில் போட்டியிடுகிறார். 
இதேபோல துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பட்பர்கஞ்சில் மூன்றாவது முறையாகப் போட்டியிடுகிறார். 
இந்தத் தேர்தலில் 24 புதிய முகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற 15 பேருக்கு இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
பிப்ரவரி 8-ஆம் தேதி தில்லி பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று கடந்த வாரம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. 
இந்நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி முதலில் அறிவித்துள்ளது. பாஜக, காங்கிரஸ் இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பெட்டியலை வெளியிடக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
46 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு: ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பட்டியலில், கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்கள் 46 பேருக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் இடம் பெற்றுள்ளனர். 15 எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் அண்மையில் இணைந்த ஆறு பேருக்கு இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிதாக 24 பேருக்கு போட்டியிடும் வாய்ப்பை அக்கட்சி வழங்கியுள்ளது. 
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மூன்றாவது முறையாக புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் மூன்றாவது முறையாக பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிடவுள்ளார். மேலும், தில்லி அமைச்சர்களும், ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களுமான கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின், இம்ரான் ஹுசைன், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் தங்களது தொகுதிகளிலேயே மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
தோல்வியடைந்தவர்களுக்கு வாய்ப்பு: கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த மூன்று பேருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கால்காஜி தொகுதியில் அதிஷி, ராஜேந்திர நகர் தொகுதியில் ராகவ் சத்தா, திமர்பூர் தொகுதியில் திலிப் பாண்டே ஆகியோர் போட்டியிடவுள்ளனர். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களின் மக்கள் நலப் பணிகள் தொடர்பான "ரிப்போர்ட் கார்டு' தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என கட்சியின் தில்லி பொறுப்பாளரும் அமைச்சருமான கோபால் ராய் தெரிவித்தார்.

பெண்களுக்கு கூடுதல் இடம்
மணீஷ் சிசோடியா தனது சுட்டுரையில், "இந்தத் தேர்தலில் 8 பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளோம். கடந்த 2015 தேர்தலில் 6 பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார். 


கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. பாஜகவுக்கு மீதியுள்ள 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன. காங்கிரஸ் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவரின் மகனுக்கு வாய்ப்பு
துவாரகா தொகுதியின் எம்எல்ஏவான ஆதர்ஷ் சாஸ்திரிக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மஹாபல் மிஸ்ராவின் மகன் வினய் குமார் மிஸ்ராவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், கடந்த திங்கள்கிழமைதான் முதல்வர் கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 மேலும், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து அக்கட்சியுடன் முரண்பட்டு வெளியேறிய வழக்குரைஞர் பிரசாந்த் பூஷணுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் திம்மர்பூர் தொகுதி எம்எல்ஏ பங்கஜ் புஷ்கருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இத் தொகுதியில் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த திலீப் பாண்டே போட்டியிடுகிறார். 
தில்லி கண்டோன்மன்ட் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் என்எஸ்ஜி கமாண்டருமான சுரேந்தர் சிங்குக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இவருக்குப் பதிலாக வீரேந்திர சிங் காடியான் போட்டியிடுகிறார். 

புதிய வேட்பாளர்கள்
ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் இணைந்தவர்களுக்குப் பதிலாக புதிய வேட்பாளர்களை ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. சாந்தினி சௌக் தொகுதியில் அத்தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏவாக இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அல்கா லம்பாவுக்கு பதிலாக பிரகலாத் செüஹ்னி நிறுத்தப்பட்டுள்ளார். அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியில் இணைந்தவுடன், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் பிரகலாத் செüஹ்னி இணைந்தது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த கர்வால் நகர் தொகுதி எம்எல்ஏ கபில் மிஸ்ரா, பிஜ்வாசன் தொகுதி எம்எல்ஏ தேவேந்திர ஷெகாவத், காந்தி நகர் எம்எல்ஏ அனில் பாஜ்பாய் ஆகியோருக்குப் பதிலாக முறையே பதக், பிஎஸ்.கூன், நவீன் செüத்ரி ஆகியோர் இத்தொகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளனர். அதேநேரம், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த அக்கட்சியின் மூத்த தலைவர் சோஹிப் இக்பாலுக்கு மாட்டியா மஹால் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் 5 வேட்பு மனுக்கள் தாக்கல்
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மனுத் தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. ஐந்து வேட்பாளர்கள் முதல் தினத்தன்று வேட்பு
மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "புராரி தொகுதியில் சுயேச்சை  வேட்பாளர் ஆஷாத் நஃபே சிங், மாட்டியாலா தொகுதியில் ராஷ்டிரீய ரஷ்டிரவாதி கட்சியைச் சேர்ந்த மொகிந்தர் சிங், புது தில்லி தொகுதியில் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியைச் சேர்ந்த வெங்கடேஷ்வர் மகா சுவாமி உள்பட ஐந்து பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்' என்றனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 21.  பிப்ரவரி 11-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

மெத்தனமான இருக்கக் கூடாது
முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில், "வேட்பாளர்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. கடுமையாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும். மக்கள் ஆம் ஆத்மி கட்சி மீது அபார நம்பிக்கை வைத்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com