சிஏஏவை அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலத்தாலும் கூற முடியாது: கபில் சிபல்

குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், அதை அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலத்தாலும் நிராகரிக்க முடியாது என காங்கிரஸ் கபில் சிபல் தெரிவித்துள்ளார
கோப்புப்படம்
கோப்புப்படம்


குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், அதை அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலத்தாலும் அதை நிராகரிக்க முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப் பெற வலியுறுத்தி முதன்முதலாக கேரள சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டப்பேரவையிலும் சிஏஏவுக்கு எதிராக நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேசமயம் கேரளம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய பாஜக ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் சிஏஏ மட்டுமல்லாது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றுக்கும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சட்டத் துறை அமைச்சருமான கபில் சிபல் இன்று (சனிக்கிழமை) கேரள இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,

"சிஏஏ நிறைவேற்றப்பட்டுவிட்டால், அதை என்னால் அமல்படுத்த முடியாது என எந்தவொரு மாநிலமும் சொல்ல முடியாது. அது சாத்தியமல்ல. அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. நீங்கள் அதை எதிர்க்கலாம், சட்டப்பேரவையில் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றலாம் மற்றும் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இதை நான் அமல்படுத்தமாட்டேன் என்று கூறுவது சிக்கலையும், கூடுதல் சிரமங்களையுமே ஏற்படுத்தும். 

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தைப் பின்பற்ற மாட்டேன் என ஒரு மாநில அரசு கூறுவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி மிகவும் கடினமாகும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com