ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த திட்டம், குடும்பத்துக்கு இரு குழந்தைகள்?

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த திட்டம் குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த திட்டம், குடும்பத்துக்கு இரு குழந்தைகள்?

மொராதாபாத்: ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடுத்த திட்டம் குடும்பத்துக்கு இரு குழந்தைகள் என்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொராதாபாத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் இதுபற்றிக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டம் வேண்டும் என வலியுறுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், 2 குழந்தைகள் திட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம். இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இல் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கு கட்டுப்பாடற்ற மக்கள்தொகை வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.  நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், 'இரண்டு குழந்தைகள்' கொள்கை வடிவத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் ஆதரிக்கும். இது காலத்தின் தேவை என்று நாங்கள் கருதுகிறோம், இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பும் இல்லாமல், அனைவருக்கும் பொருந்தும் விதமாக இருக்க வேண்டும். 2 குழந்தைகள் கொள்கையை வலியுறுத்துவதே எங்களுடைய அடுத்த திட்டம் என தெரிவித்தார்.

மேலும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு நாடு முழுவதும் ஒரு தன்னம்பிக்கையான சூழல் காணப்பட்டது. அதைத் தொடர்ந்து குடியுரிமைத் திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்தன. இந்த சட்டத்தின் யதார்த்தத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. 

அயோத்தி பிரச்னையில் ராமர் கோயில் அறக்கட்டளை உருவாகும் வரை மட்டுமே ஆர்.எஸ்.எஸ். பங்கு இருந்தது என்றும், அறக்கட்டளை உருவானதும் கோயில் தொடர்பான விஷயங்களிலிருந்து வெளியேறிவிடுவோம் என்றும் மோகன் பாகவத் தெளிவுபடுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com