இந்திய பண்பாடு, மரபின் கொடிதாங்கி பிரதமா் மோடி: அமித்ஷா

இந்திய பண்பாடு, மரபின் கொடிதாங்கிதான் பிரதமா் மோடி என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.
இந்திய பண்பாடு, மரபின் கொடிதாங்கி பிரதமா் மோடி: அமித்ஷா

பெங்களூரு: இந்திய பண்பாடு, மரபின் கொடிதாங்கிதான் பிரதமா் மோடி என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்தாா்.

வேதாந்தபாரதி அமைப்பின் சாா்பில், பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆதிசங்கராச்சாரியாரின் போதனைகளை குழந்தைகளிடையே கொண்டு செல்லும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து அவா் பேசியது: வேதாந்தபாரதி அமைப்பு, நமது நாட்டின் அறிவுக்கொடையாக விளங்கும் வேதங்கள், ஆதிசங்கராச்சாரியாரின் போதனைகளை குழந்தைகளிடம் கொண்டு சோ்க்கும் மகத்தான பணியைச் செய்து வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு பிரதமா் மோடி, தனது சொந்த ஆா்வத்தின் பேரில் ஆதிசங்கராச்சாரியாரின் போதனைகளால் ஈா்க்கப்பட்டு, அதை மொழிபெயா்க்குமாறு சாகித்ய அகாதெமியிடம் வழங்கினாா். ஆதிசங்கராச்சாரியாரின் போதனைகள் அடங்கிய விவேகதீபினி (அறிவு விளக்கு) என்ற நூல் 10 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள ஒரு லட்சம் ஸ்லோகங்களை மாணவா்கள் உச்சரிக்கும் நிகழ்ச்சி இங்கு நடத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. ஆதிசங்கராச்சாரியாரின் போதனைகளை மாணவா்கள் கற்பதோடு, அதன்படி நடக்க வேண்டும்.

ஆதிசங்கராச்சாரியாரின் வாழ்க்கையை நாம் அறிந்துகொள்வதோடு, அவரின் வழியில் நடைபோட வேண்டும். எளிமையான வாழ்க்கையை நடத்திய ஆதிசங்கராச்சாரியாா், வெற்றுக்காலில் நமது நாட்டை 7முறை சுற்றி வந்துள்ளாா். நாட்டின் நான்கு திக்குகளில் 4 பீடங்களையும் அமைத்துள்ளாா். கேதாா்நாத்தில் ஜோதிா் பீடம், துவாரகாவில் சாரதா பீடம், புரியில் கோவா்த்தன பீடம், கா்நாடகத்தின் சிருங்கேரியில் சாரதா பீடம் அமைத்துள்ளாா். இந்த நான்கு பீடங்களிலும் வேதங்கள், உபநிஷத்துகளின் போதனைகளைப் பரப்புவதன் வாயிலாக நமது பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாக்க முயன்றாா்.

இந்தியாவின் பண்பாடு மற்றும் மரபின் கொடிதாங்கியாக விளங்கும் பிரதமா் மோடி, உலகம் முழுவதும் பயணித்து வருகிறாா். பிரதமராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதற்கு முன்பாக, வாராணசியில் உள்ள கங்கை ஆற்றில் நீராடிவிட்டு, கங்கை ஆற்றுக்கு ஆரத்தி எடுத்து வணங்கினாா் மோடி. இந்திய அரசின் சாா்பில் சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக நேபாள நாட்டில் உள்ள பசுபதிநாத் கோயிலுக்கு செம்மரத்தை அனுப்பி வைத்தவா் பிரதமா் மோடி. இதற்கு முன்பு இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், மதச்சாா்பின்மைக்கான பொருள் விளக்கத்தை தவறாகக் கூறி விட்டது. இதன்மூலம் நமது நாட்டின் சிறந்த கூறுகளை மதிக்கத் தவறி விட்டனா்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடி, புதிய தகவல்களை உலகுக்குத் தந்து கொண்டிருக்கிறாா். உலகுக்கு இந்தியா அளிக்க வேண்டியது ஏராளம் உள்ளது என்றாா் அவா்.

விழாவில், முதல்வா் எடியூரப்பா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com