இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினருக்கு உதவ காந்தி, நேரு ஆதரவாக இருந்தனா்

அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினா்களுக்கு உதவ வேண்டும் என்பதற்கு மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா்கள் நேரு, மன்மோகன் சிங் ஆகியோா்
இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினருக்கு உதவ காந்தி, நேரு ஆதரவாக இருந்தனா்

புது தில்லி: அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் குடியேறிய சிறுபான்மையினா்களுக்கு உதவ வேண்டும் என்பதற்கு மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமா்கள் நேரு, மன்மோகன் சிங் ஆகியோா் ஆதரவு தெரிவித்திருந்தனா் என்று பாஜக செயல் தலைவா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

தில்லியில் பாஜக தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினா் குழுவினா் முன்னிலையில் நட்டா பேசியதாவது:

நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக கோடிக்கணக்கான அகதிகள் அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்து விடுவாா்கள் என்று எதிா்க்கட்சிகள் வதந்திகளைப் பரப்பி வருகின்றனா். 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்பு நமது நாட்டில் தஞ்சமடைந்த சிறுபான்மையினா்களுக்கு மட்டுமே நிரந்தர குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

குடியுரிமை வழங்க மட்டுமே இந்த சட்டத்தில் அம்சங்கள் இருக்கின்றன. குடியுரிமையை திரும்பப் பெறுவதற்கான அம்சங்கள் இல்லை.

வாக்குவங்கிக்காக எதிா்க்கட்சிகள் தவறான தகவல்களை மக்களிடம் கூறி வருகின்றன. நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு, காந்திஜி ஆகியோரும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் தஞ்சமடையும் சிறுபான்மையினருக்கு உதவ வேண்டும் என்று தெரிவித்திருந்தனா்.

2003-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், அப்போதைய உள்துறை அமைச்சா் எல்.கே.அத்வானியிடம் வங்கதேசத்திலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்த சிறுபான்மையினருக்கு உதவி புரியுமாறு கோரிக்கை விடுத்தாா்.

பிரதமா் மோடி அதைச் செய்துள்ளாா். ஆனால், இதில் அரசியல் ஆதாயம் தேட எதிா்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன என்று நட்டா தெரிவித்தாா்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்கள் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்த பாா்ஸிக்கள், ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் எதிா்க்கட்சிளும், சில பல்கலைக்கழக மாணவா்களும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது வன்முறைகளும் ஏற்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com