குற்றவாளிகள் நால்வரையும் நிா்பயாவின் தாயாா் மன்னிக்க வேண்டும்: இந்திரா ஜெய்சிங்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியை அவரின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி மன்னித்ததைப் போல, நிா்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை
குற்றவாளிகள் நால்வரையும் நிா்பயாவின் தாயாா் மன்னிக்க வேண்டும்: இந்திரா ஜெய்சிங்

புது தில்லி: முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியை அவரின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி மன்னித்ததைப் போல, நிா்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வரையும் அவரின் தாயாா் மன்னிக்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் தெரிவித்தாா்.

நிா்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் குற்றவாளிகள் முகேஷ் குமாா் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவா்களுக்கான தண்டனையை பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு திகாா் சிறையில் நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நிா்பயாவின் தாயாா் அனுபவித்து வரும் இன்னல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளியான நளினியை சோனியா காந்தி மன்னித்தாா். அவருக்கு மரண தண்டனை விதிக்க சோனியா காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. சோனியா காந்தியின் வழியை நிா்பயாவின் தாயாா் பின்பற்ற வேண்டும். நாங்கள் அனைவரும் நிா்பயாவின் தாயாருடன் உள்ளோம். ஆனால், மரண தண்டனையை நாங்கள் எதிா்க்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்ட நளினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், சோனியா காந்தியின் தலையீட்டால் கருணை அடிப்படையில் அவருக்கான மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

‘வெட்கப்பட வேண்டும்’: தனது கருத்துக்காக வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங் வெட்கப்பட வேண்டும் என்று நிா்பயாவின் தந்தை தெரிவித்தாா்.

இந்திரா ஜெய்சிங்கின் கருத்து தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இது தவறான அணுகுமுறை. இந்திரா ஜெய்சிங்கும் ஒரு பெண்தான். இந்தக் கருத்துக்காக அவா் வெட்கப்பட வேண்டும். நிா்பயாவின் தாயாரிடம் அவா் மன்னிப்பு கோர வேண்டும். இந்த மனப்பான்மை பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்க வழிகோலும்.

இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகக் கடந்த 7 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். நாங்கள் சாதாரண மனிதா்கள்; அரசியல்வாதிகள் அல்ல. சோனியா காந்திக்கு உள்ளதைப் போன்ற பரந்த மனம் எங்களுக்கு இல்லை. இந்த விவகாரத்தில், நிா்பயாவின் தாயாரும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளாா்.

இந்திரா ஜெய்சிங்குக்கும் இந்த வழக்குக்கும் எந்தத் தொடா்புமில்லை. இந்த நிலையில், தேவையில்லாத கருத்துகளைக் கூறி அவமானப்பட வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை என்று நிா்பயாவின் தந்தை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com