இந்தியாவில் 70% ஏழைகளின் சொத்துகளை விட 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம்

இந்தியாவில் உள்ள 70% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிடவும், வெறும் 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 70% ஏழைகளின் சொத்துகளை விட 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம்


டாவோஸ்: இந்தியாவில் உள்ள 70% ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைவிடவும், வெறும் 1% பணக்காரர்களின் சொத்து 4 மடங்கு அதிகம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

உலக பொருளாதார மன்றத்தின் 50வது ஆண்டுக் கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை முன்னிட்டு, ஆக்ஸ்ஃபாம் உரிமைகள் குழு சார்பில் 'டைம் டு கேர்' என்ற ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அந்த ஆய்வில் உலகில் உள்ள 2,153 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு, 460 கோடி ஏழைகளின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த பூமியில் வாழும் மக்களில் 460 கோடி மக்கள் என்பது 60 சதவீதமாகும்.

மேலும் அந்த ஆய்வில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் உள்ள 63 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு என்பது 2018 - 19ம் ஆண்டில் மத்திய அரசு தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.24,42,200 கோடியை விட அதிகம்.

ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் ஒருவர் ஒரு ஆண்டில் பெறும் ஊதியத்தை, வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு 22,277 ஆண்டுகள் ஆகும்.

வீட்டு வேலை செய்யும் ஒருவர் ஒரு ஆண்டில் சம்பாதிக்கும் பணத்தை, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி 10 நிமிடத்தில் சம்பாதிக்கிறார்.

ஆப்ரிக்காவில் உள்ள அனைத்துப் பெண்களும் வைத்திருக்கும் ஒட்டுமொத்த சொத்துக்களைவிடவும், உலக அளவில் இருக்கும் 22 மிகப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகம் என்பதும் இதில் குறிப்பிடத்தக்கது.

இந்த ஏற்றத்தாழ்வை ஒழிக்க உலக நாடுகள் கொள்கையை வகுக்காத வரையில் உலகில் இந்த ஏற்றத்தாழ்வு சமநிலையை அடைய வாய்ப்பே இல்லை என்று இந்தியாவுக்கான ஆக்ஸ்ஃபாம் தலைமை செயல் நிர்வாகி அமிதாப் பேஹர் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், இந்தியாவில் ஏராளமான பெண்களும், சிறுமிகளும் பல வீட்டு வேலைகளையும், குழந்தைகள் மற்றும் முதியவர்களை பராமரிக்கும் பணியிலும் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் சமூகத்தின் நகர்வுக்கு இவர்களது பெரும்பணியே அடிப்படை ஆதாரமாக இயங்கி வருகிறது.

இவ்வாறு அதிக நேரத்தை ஊதியமில்லாத வேலைகளைச் செய்யும் பெண்களுக்குக் கிடைக்கும் ஒரு சிறிய நேரத்தில் ஏதேனும் படிக்க வைத்து அல்லது வேலைக் கற்றுக் கொடுத்து ஒரு குறைந்தபட்ச வருமானத்தை ஈட்டும் வகையில் அரசுகளால் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டால் தற்போதைய பொருளாதார மாற்றங்களால் கிடைக்கும் பயன்கள் அவர்களுக்கும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

பெரும் பணக்காரர்களிடம் இருந்து அரசுகள் வசூலிக்கும் வரி வருவாயை, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மற்றும் பெண்களின் நிலையை உயர்த்தப் பயன்படுத்த வேண்டும். அதில்லாமல், கிராம மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், பெண்கள் மற்றும் சிறுமிகளின் வேலைப்பளு குறைக்கப்படலாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com