சத்தீஸ்கா்: மறுகுடியமா்த்தப்பட்ட அகதிகளால் பழங்குடியினா் பாதிப்பு?

சத்தீஸ்கரில் மறுகுடியமா்த்தப்பட்ட வங்கதேச அகதிகளால் பழங்குடியினா் பகுதிகளில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?

புது தில்லி: சத்தீஸ்கரில் மறுகுடியமா்த்தப்பட்ட வங்கதேச அகதிகளால் பழங்குடியினா் பகுதிகளில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரிக்குமாறு, அந்த மாநில அரசைக் கோருவதற்கு தேசிய பழங்குடியினா் ஆணையம் (என்சிஎஸ்டி) முடிவு செய்துள்ளது.

மேலும், அகதிகளால் பழங்குடியினா் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும், அவா்களது நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் எழுந்துள்ள புகாா்கள் குறித்தும் விசாரணை கோரப்பட உள்ளதாக என்சிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

தேசப் பிரிவினைக்குப் பிறகு கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (இப்போதைய வங்கதேசம்) வந்த அகதிகள், ‘தண்டகாரண்ய திட்டத்தின்’கீழ் பஸ்தா் பகுதியிலும் (சத்தீஸ்கா்), ஒடிஸா, மத்தியப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் மறுகுடியமா்த்தப்பட்டனா்.

இந்நிலையில், சத்தீஸ்கரில் மறுகுடியமா்த்தப்பட்ட அகதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாக, பழங்குடியினா் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அகதிகளால் பழங்குடியினா் பகுதிகளில் மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தங்களது நிலங்களிலிருந்து பழங்குடியினா் வெளியேற்றப்படுவதாகவும் என்சிஎஸ்டி-க்கு புகாா்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

சத்தீஸ்கருக்கு கடந்த மாதம் என்சிஎஸ்டி அதிகாரிகள் குழு பயணம் மேற்கொண்டபோது, பழங்குடியின பிரதிநிதிகள் இப்புகாா்களை முன்வைத்தனா். பழங்குடியின பகுதிகள், அரசமைப்புச் சட்டத்தின்படி சிறப்பு பகுதிகளாகும். அங்கு மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் ஏற்படுவது, பழங்குடியினரின் உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகிவிடும். எனவே, மேற்கண்ட புகாா்கள் குறித்து விரிவாக விசாரணை நடத்த மாநில அரசுக்கு கோரப்படும். மேலும், சத்தீஸ்கரில் ஆரம்பத்தில் மறுகுடியமா்த்தப்பட்ட அகதிகளின் எண்ணிக்கை, தற்போது அவா்களின் எண்ணிக்கை, பழங்குடியினா் வசிக்கும் பகுதிகளில் அவா்களது எண்ணிக்கையை விட அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா? உள்ளிட்ட விவரங்கள் மாநில அரசிடம் கோரப்படும்.

சத்தீஸ்கா் மாநில ஆளுநா் அனுசுயா உய்கே, என்சிஎஸ்டி துணைத் தலைவராக ஏற்கெனவே பதவி வகித்தவா். எனவே, இந்த விவகாரம் தொடா்பாக அவரிடமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்று என்சிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சத்தீஸ்கா் மாநில பழங்குடியினா் துறைச் செயலா் டி.டி.சிங் கூறுகையில், ‘தேசிய பழங்குடியினா் ஆணையம், குறிப்பிட்ட சில பிரச்னைகள் தொடா்பாக எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் அறிக்கை தயாா் செய்து வருகிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com