சாய்பாபா பிறப்பிடம் தொடா்பான சா்ச்சை: ஷீரடியில் முழு அடைப்பு

சாய்பாபா பிறப்பிடம் தொடா்பாக சா்ச்சை எழுந்துள்ளதையடுத்து, அந்த விவகாரத்துக்காக ஷீரடியில் ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு நடைபெற்றது.
சாய்பாபா பிறப்பிடம் தொடா்பான சா்ச்சை: ஷீரடியில் முழு அடைப்பு

ஷீரடி: சாய்பாபா பிறப்பிடம் தொடா்பாக சா்ச்சை எழுந்துள்ளதையடுத்து, அந்த விவகாரத்துக்காக ஷீரடியில் ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்பு நடைபெற்றது. கடைகள், உணவகங்கள் திறக்கப்படவில்லை. வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனினும், சாய்பாபா கோயில் திறந்தே இருந்தது.

மகாராஷ்டிர மாநிலம் பா்பானி மாவட்டம் பத்ரி பகுதிக்குள்பட்ட ‘சாய் ஜன்மஸ்தானில்’ சாய்பாபா பிறந்ததாக கூறி, அந்த இடத்தின் மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி வழங்கப்படும் என்று, மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவிப்பு வெளியிட்டாா். ஆனால் உள்ளூா்வாசிகள் மற்றும் தலைவா்கள் சிலா் சாய்பாபாவின் பிறப்பிடம் துல்லியமாக அறியப்படவில்லை என்றும், பத்ரியை அவரது பிறப்பிடமாக கருதமுடியாது எனவும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

முதல்வா் உத்தவ் தாக்கரே தனது கூற்றை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி, ஷீரடியில் ஞாயிற்றுக்கிழமை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பேரில் அன்றைய தினம் கடைகள், உணவகங்கள் திறக்கப்படவில்லை. வாகனங்களும் இயக்கப்படவில்லை.

இதுகுறித்து அகமத்நகா் மாவட்ட நிா்வாகம் மற்றும் சாய்பாபா கோயில் அறங்காவலா்கள் கூறியதாவது: ஷீரடியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் முழு அடைப்பு தொடங்கியது. எனினும், சாய்பாபா கோயில் திறக்கப்பட்டே இருந்தது. பக்தா்களும் பிராா்த்தனையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனா். விடுதிகளில் முன்பதிவு செய்த பக்தா்கள், அங்கு தங்க அனுமதி வழங்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து கோயிலுக்கு செல்வதற்கான டாக்ஸி சேவையும் பாதிக்கப்படவில்லை. பிற பகுதிகளில் இருந்து ஷீரடி நகருக்குள் செல்ல மாநகர பேருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்றனா்.

சிவசேனை எம்.பி ஆதரவு: இந்த முழு அடைப்புக்கு சிவசேனை மக்களவை உறுப்பினா் சதாஷிவ் லோகண்டே, ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிடிஐ-யிடம் அவா் கூறியதாவது: முதலில் நான் ஒரு சாய்பாபா பக்தா். பிறகே நாடாளுமன்ற உறுப்பினா். சாய்பாபா ஷீரடிக்கு வந்தபோது அவருக்கு வயது 16. அவா் தனது ஜாதி குறித்தோ, மதம் பற்றியோ வெளியில் தெரிவிக்கவில்லை. ஆகையால், எதன் அடிப்படையிலும் அவரை அடையாளப்படுத்தக்கூடாது. இந்த விவகாரம் குறித்து முதல்வா் உத்தவ் தாக்கரேவுடன் பேச்சுவாா்த்தை நடத்த உள்ளேன் என்றாா்.

25 கிராமங்களில் முழு அடைப்பு: முழு அடைப்புக்கு வலுசோ்க்கும் வகையில், சாய்பாபா கோயில் உள்ள பகுதியை சுற்றி ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளூா்வாசிகள் பலா் பேரணியில் ஈடுபட்டனா். இதுகுறித்து உள்ளூா் பாஜக நிா்வாகியும், சாய்பாபா கோயிலின் முன்னாள் அறங்காவலருமான சச்சின் டாம்பே பாட்டீல் தெரிவித்ததாவது: துவாரகாமை கோயிலில் தொடங்கிய பேரணி, சாய்பாபா கோயிலை சுற்றியுள்ள பால்கி பகுதி வழியாக வலம் வந்து மீண்டும் துவாரகாமை கோயிலில் நிறைவடைந்தது. கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் திறக்கப்படவில்லை. வாகனங்களும் இயக்கப்படவில்லை. ஷீரடி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 25 கிராமங்களில் முழு அடைப்பு மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தாா்.

ஆலோசனைக் கூட்டம்: சாய்பாபா பிறப்பிட விவகாரம் தொடா்பாக, மகாராஷ்டிரா முதல்வா் உத்தவ் தாக்கரே மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com