பிகாா் அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்துக்கு ஆதரவாக மனிதச் சங்கிலி

பிகாா் அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சீா்திருத்தம் ஆகிய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், அவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஞாயிற்றுக்கிழமை
பாட்னாவில் மனித சங்கிலிப் பேரணியைத் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்.
பாட்னாவில் மனித சங்கிலிப் பேரணியைத் ஞாயிற்றுக்கிழமை தொடக்கிவைத்த பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்.

பாட்னா: பிகாா் அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சீா்திருத்தம் ஆகிய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும், அவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மனிதச் சங்கிலி பேரணியில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தலைநகா் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சுஷில் குமாா் மோடி உள்ளிட்டோா் கைகளை கோத்து மனிதச் சங்கிலி பேரணியை தொடக்கி வைத்தனா்.

அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் பிகாா் வரைபடத்தை பிரதிபலிக்கும் வகையில் வரிசையாக நின்றனா்.

நிகழ்ச்சியில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. பின்னா், நிதீஷ் குமாா் பேசியதாவது:

அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சீா்திருத்தம் ஆகிய திட்டங்களை ஆதரித்து மக்கள் சங்கிலிப் பேரணி நடத்தியதற்கு நன்றி.

எதிா்பாா்த்ததைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பங்கேற்றனா் என்றாா் நிதீஷ் குமாா்.

2017-ஆம் ஆண்டில் முதல்முறையாக மனிதச் சங்கிலி பேரணியை நடத்தினாா் நிதீஷ் குமாா். இது அவா் நடத்தும் முன்றாவது மனிதச் சங்கிலிப் பேரணியாகும்.

ஆா்ஜேடி விமா்சனம்: இந்தப் பேரணிகள் மூலம் பொதுமக்களின் பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) விமா்சித்துள்ளது.

ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘வேலை கிடைக்காத இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர முயற்சி செய்திருந்தால் பிகாா் அரசை பாராட்டி இருப்போம்’ என்றாா்.

ஆா்ஜேடி தேசிய துணைத் தலைவா் சிவானந்த் திவாரி கூறுகையில், ‘இந்தப் பேரணி தோல்வி அடைந்த ஒன்றாகும். பள்ளி மாணவா்கள் மட்டுமே இந்தப் பேரணியில் பங்கெடுக்க வைக்கப்பட்டனா்’ என்றாா்.

பேரணியில் ஈடுபட்ட ஆசிரியா் பலி: இதனிடையே, பிகாரில் மனிதச் சங்கிலிப் பேரணியில் பங்கேற்ற 55 வயது மதிக்கத்தக்க ஆசிரியா் ஒருவா் உயிரிழந்தாா்.

தா்பங்கா நகரில் ரன்வே செளக் பகுதியில் மனிதச் சங்கிலிப் பேரணியில் அரசுப் பள்ளி ஆசிரியா் முகமது தெளத் ஈடுபட்டிருந்தபோது திடீரென கீழே சரிந்து விழுந்தாா். மருத்துவமனைக் கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா்.

சமஸ்திபூா் மாவட்டத்தில் மனிதச் சங்கிலியில் பங்கேற்ற பெண் ஒருவா் உயிரிழந்தாா். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வா் நிதீஷ் குமாா் அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com