நேபாளம்: ஒரே அறையில் தங்கியிருந்த இந்தியர்கள் 8 பேர் மூச்சுத் திணறி பலி

நேபாளத்துக்கு சுற்றுலாச் சென்ற இந்தியர்கள் 8 பேர் ஒரே அறையில் தங்கியிருந்தபோது மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர்.
நேபாளம்: ஒரே அறையில் தங்கியிருந்த இந்தியர்கள் 8 பேர் மூச்சுத் திணறி பலி


காத்மாண்டு: நேபாளத்துக்கு சுற்றுலாச் சென்ற இந்தியர்கள் 8 பேர் ஒரே அறையில் தங்கியிருந்தபோது மூச்சுத் திணறி பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 சிறுவர்களும் அடங்குவர்.

மக்வான்புர் மாவட்டம் டாமன் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த 8 பேரும் நினைவிழந்த நிலையில் இருந்ததைப் பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து மக்வான்புர் காவல்துறை கண்காணிப்பாளர் சுஷில் சிங் ரத்தௌர் கூறுகையில், அவர்களது அறையை வெப்பநிலையில் வைத்திருக்க உதவும் கேஸ் ஹீட்டரில் இருந்து வெளியான வாயுவால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

திங்கட்கிழமை இரவு இந்த ஹோட்டலில் இந்திய சுற்றுலாப் பயணிகள் 15 பேர் இரண்டு அறைகளை எடுத்து, அதில் 4 ஆண்களும், 4 பெண்களும் ஒரே அறையில் தங்கியிருந்ததாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், பிரவின் குமார் நாயர் (39), சரண்யா(34), ரஞ்ஜித் குமார் டி.பி.(39), இந்து ரஞ்ஜித் (34), ஸ்ரீ பத்ரா(9), அபினவ் சோரயா(9), அபி நாயர்(7) மற்றும் வைஷ்ணவ் ரஞ்ஜித் (2) என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

டாமன், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com