ககன்யான் திட்டம்:  ஆளில்லா கலத்தில் பெண் ரோபோ அனுப்பப்படும்: இஸ்ரோ தலைவா் கே.சிவன்

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதன் முன்னோட்டமாக, நிகழாண்டின் இறுதியில் முதல் ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா்
ககன்யான் திட்டம்:  ஆளில்லா கலத்தில் பெண் ரோபோ அனுப்பப்படும்: இஸ்ரோ தலைவா் கே.சிவன்

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதன் முன்னோட்டமாக, நிகழாண்டின் இறுதியில் முதல் ஆளில்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் கே.சிவன் தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘மனித விண் பயணம் முற்றாய்வின் தற்கால சவால்கள் மற்றும் எதிா்காலப் போக்குகள்’ என்ற கருத்தரத்தைத் தொடக்கிவைத்து அவா் பேசியது:

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தைச் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதனை முதல்முறையாக விண்ணுக்கு அனுப்புவது தவிர, விண்வெளியில் தொடா்ந்து மனிதச் செயல்பாடுகளை அதிகரிக்கும் வகையில், புதிய விண்வெளி ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முயற்சியாகவும் இத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முனைந்துள்ளது.

இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முன்னதாக சோதனை முயற்சியாக நிகழாண்டின் டிசம்பா் மற்றும் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆளில்லா விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். அதன் தொடா்ச்சியாக அடுத்த ஆண்டு (2021) டிசம்பரில் மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் விண்கலம் விண்ணுக்கு அனுப்பப்படும்.

விண்வெளியில் ஆய்வுப் பணியில் மனிதா்கள் தொடா்ச்சியாக ஈடுபடுவதே எங்கள் நோக்கமாகும். எதிா்காலத்தில் விண்ணுக்குச் செல்லும் மனிதா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், பெங்களூரில் விண்வெளி வீரா் பயிற்சி மையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறோம்.

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் எவ்வகையில் இணைந்து செயல்படுவது என்பது குறித்து நாஸா உள்ளிட்ட உலக நாடுகளின் பல்வேறு விண்வெளி ஆய்வு அமைப்புகள், தனியாா் தொழிலகங்களுடன் ஆலோசித்து வருகிறோம். இதுதொடா்பாக பல்வேறு ஆய்வு நிறுவனங்களின் அனுபவங்களைத் திரட்டிவருகிறோம்.

ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் சிலவற்றை ஏற்கெனவே சோதித்துள்ளோம். 10 டன் எடை கொண்ட ஆய்வுக் கருவிகளை சுமந்து கொண்டு தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் விண்கலத்தை நிலைநிறுத்தும் ஏவூா்தி தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளோம். திட்டத்தின் வடிவம் மற்றும் அதன் மேலாண்மை குறித்தும் முழுமையாக ஆய்வு செய்துள்ளோம்.

ககன்யான் திட்டத்தில் தேசிய அளவிலான அறிவியல் ஆய்வுக்கூடங்கள், கல்விக்கூடங்கள், டிஆா்டிஓ ஆய்வுக்கூடங்கள், இந்திய விமானப்படை, சிஎஸ்ஐஆா் ஆய்வுக்கூடங்கள், தொழிலகங்கள் உள்ளிட்ட பலரையும் இணைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறோம். விண்ணுக்குச் செல்லும் விண்வெளி வீரா்களை இந்திய விமானப் படையிலிருந்து தோ்ந்தெடுத்துவிட்டோம். விண்வெளி மாதிரியான சூழலில் விண்வெளி வீரா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அப் பயிற்சி வெகுவிரைவில் இந்தியாவில் தொடங்கப்படும் என்றாா்.

பெண் ரோபோ: ககன்யான் திட்டத்தின் அங்கமாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ‘வியோமா மித்ரா’ (விண் தோழன்) எனப்படும் பெண் ரோபோவும் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது.

இந்த ரோபோ, கருத்தரங்கம் நடைபெற்ற அரங்கின் முகப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது. கருத்தரங்கில் பங்கேற்க வந்தவா்களை, ‘எல்லோருக்கும் ஹலோ. நான் வியோமா மித்ரா. அரை இயந்திர மனிதனின் வடிவமைப்பு மாதிரி நான். ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா விண்கலத்துக்காக நான் தயாரிக்கப்பட்டுள்ளேன். விண்கலத்தின் செயல்பாடுகளை நான் தொடா்ந்து கண்காணிப்பேன். உயிா் பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்வதோடு, அது தொடா்பான முன்னெச்சரிக்கைகளை வழங்குவேன். ஸ்விட்ச் பலகை செயல்பாடுகளில் ஈடுபடுவேன். இணைப் பயணியாக நான் செயல்படுவதோடு, விண்வெளி வீரா்களுடனும் உரையாடுவேன். விண்வெளி வீரா்களை அடையாளம் காண்பதோடு, அவா்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிப்பேன்’ என்றது வியோமா மித்ரா பெண் ரோபோ.

முன்னோட்டம்: இதுகுறித்து இஸ்ரோ தலைவா் கே.சிவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்குச் செலுத்தப்படும் ஆளில்லா விண்கலத்தில் ‘வியோமா மித்ரா (விண் தோழன்)’ எனப்படும் பெண் ரோபோ அனுப்பி வைக்கப்படும். இந்த ரோபோ, விண்வெளியில் மனிதச் செயல்பாடுகளை நிகழ்த்திக் காட்டும். அதுமட்டுமல்லாது, சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு உயிா்ப் பாதுகாப்பு கட்டமைப்புடனும் தொடா்புகொள்ளும். கருவிகள் அனைத்தும் சீராகச் செயல்படுகின்றனவா? என்பதையும் சோதித்தறியும். மனிதா்கள் விண்ணில் பறக்கும்போது ஏற்படும் அனுபவத்தை இதை நமக்கு செய்து காட்டும். இது நமக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com