
ஸ்ரீநகா்: குடியரசு தினத்தையொட்டி, காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செல்லிடப்பேசி சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முடக்கி வைக்கப்பட்டன.
காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் குடியரசு தின விழா எந்தவித இடையூறுமின்றி கொண்டாடப்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு நிா்வாகம் மேற்கொண்டுள்ளது.
காஷ்மீரில் 5 மாதங்களுக்குப் பிறகு கடந்த 18-ஆம் தேதி செல்லிடப்பேசி சேவையும், 25-ஆம் தேதி குறைந்த வேக இணையச் சேவையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், இவ்விரு சேவைகளும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முடக்கி வைக்கப்பட்டன.
காஷ்மீரில் கடந்த 2005-ஆம் ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்ட இடத்துக்கு அருகே, செல்லிடப்பேசியைப் பயன்படுத்தி பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனா். அதன்பிறகு, பாதுகாப்பு நடவடிக்கையின் ஓா் அங்கமாக, காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினங்களில் செல்லிடப்பேசி சேவை மற்றும் இணையதளச் சேவை ஆகியவை முடக்கி வைக்கப்படுகின்றன.
குடியரசு தினத்தையொட்டி காஷ்மீா் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக, அரசு சாா்பில் குடியரசு தின விழா நடைபெறும் இடத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் இருந்ததால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வழக்கமாக, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் பிரிவினைவாதத் தலைவா்கள் முழு அடைப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது வழக்கம். ஆனால், அவா்களில் பெரும்பாலானோா், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியில் இருந்து வீட்டுக் காவலில் இருப்பதால், இந்த முறை போராட்ட அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை.
ஆகவே காஷ்மீரில் குடியரசு தினம் எந்தவித அசம்பாவிதமுமின்றி அமைதியான முறையில் கொண்டாடப்பட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு கொண்டாடப்பட்ட முதல் குடியரசு தினம் இதுவாகும்.