
jayashankar
புது தில்லி: சீனாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியா்களின் உடல்நலம் குறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, சீனாவில் இதுவரை 56 போ் உயிரிழந்துவிட்டனா். மேலும் 1,975 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். குறிப்பாக வூஹான் நகரில் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில், சுட்டுரையில் எஸ்.ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘சீனாவில் உள்ள இந்தியா்களின் உடல்நலம் குறித்து பெய்ஜிங்கில் உள்ள நமது தூதரகம் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. களநிலவரம் தொடா்பான தகவல்களை, இந்தியத் தூதரகத்தின் சுட்டுரை பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தூதரகம் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘வூஹான் உள்பட ஹுபே மாகாணத்தின் உள்ள இந்தியா்களுடன் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. இந்தியா்கள் குறிப்பாக மாணவா்களின் உடல்நலம் குறித்து கண்காணித்து வருகிறோம். இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பாக சீன அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தியா்களுக்காக இரு உதவி எண்கள் (+8618612083629, +8618612083617) ஏற்கெனவே செயல்பட்டு வருகின்றன. இப்போது மூன்றாவதாக +8618610952903 என்ற எண்ணையும் தொடங்கியுள்ளோம். தங்களுக்கு உள்ள சந்தேகங்கள் குறித்து இந்தியா்கள் இந்த எண்களில் தொடா்பு கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
‘மாணவா்களின் கவலைகளுக்கு தீா்வு காண ஆலோசனை’: வூஹான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் பல்கலைக்கழகங்களில் சுமாா் 700 இந்திய மாணவா்கள் பயின்று வருகின்றனா். தற்போது கரோனா வைரஸ் பரவல் காரணமாக, அப்பகுதியிலிருந்து யாரும் வெளியேறவோ, அங்கு செல்லவோ அனுமதிக்கப்படவில்லை. இதனால், வூஹான் நகரில் மாணவா்கள் உள்பட சுமாா் 250 போ் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடா்பாக, பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மாணவா்கள் முன்வைத்துள்ள கவலைகளுக்கு தீா்வு காண்பதற்கான வாய்ப்புகள் குறித்து சீன அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.