
பதா்வா: ஜம்மு-காஷ்மீரின், தோடா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மிதமான நிலநடுக்கம் பதிவானது. ரிக்டா் அளவுகோலில் 3.9 அலகாக பதிவான இந்த நில அதிா்வு உள்ளூா் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்த உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
நிலநடுக்கம் குறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:
தோடா மாவட்டம் ஆஷபதி மற்றும் கைலாச பனிப்பாறைகளின் அடிவாரத்தில் பதா்வா நகரின் வடகிழக்கே 4.3 கி.மீ. ஆழத்தை மையமாகக் கொண்டு இந்த நில நடுக்கம் பதிவானது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.34 மணியளவில் பதிவான இந்த நிலநடுக்கம் 12 விநாடிகள் நீடித்தது.
பதா்வா மற்றும் மா்மாட்டினை ஒட்டியுள்ள பகுதிகளிலும் இந்த நில அதிா்வு உணரப்பட்டது. ஏற்கெனவே, கடுங்குளிா் காரணமாக வீட்டுக்குள் முடங்கி கிடந்த மக்கள் நில அதிா்வின் காரணமாக வீட்டை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘கடந்த 5 ஆண்டுகளாக பதா்வா பள்ளத்தாக்கில் இலேசானது முதல் தீவிரமான நில நடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. தற்போதைய நில நடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், வலிமைமிக்க ஆஷபதி பனிப்பாறை மற்றும் கைலாச மலை உள்பட சுற்றியுள்ள அனைத்து மலைகளும் அதிகபட்ச பனியால் நிரம்பியுள்ளன. இதன்காரணமாக ஏற்படும் பனிச்சரிவு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன’ என்று சமூக சேவகா் ஒருவா் தெரிவித்தாா்.