
போரில் உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு தில்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் பிரதமா் மோடி.
புது தில்லி: குடியரசு தினத்தையொட்டி, தில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தேசிய போா் நினைவிடத்தில் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து, நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தினாா்.
தேசிய போா் நினைவிடத்தில் அவா் மரியாதை செலுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும்.
வழக்கமாக, குடியரசு தினம், சுதந்திரம் தினம் போன்ற தேசிய அளவில் முக்கியத்துவம் நிறைந்த நாள்களில் இந்தியா கேட் வளைவு அருகில் உள்ள அமா் ஜவான் ஜோதி நினைவிடத்தில் முப்படைத் தளபதிகள், பிரதமா் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
அந்த இடத்தில், துப்பாக்கியும், ஒரு தலைக்கவசமும், ஓா் அணையா தீபமும் இருக்கும். கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது உயிரிழந்த வீரா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 1972-ஆம் ஆண்டில் அமா் ஜவான் ஜோதி நினைவிடம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியா கேட் வளாகத்தில் சுமாா் 40 ஏக்கா் பரப்பளவில் புதிதாக தேசிய போா் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் மையப்பகுதியில் 15.5 மீட்டா் உயரத்தில் தூண் நிறுவப்பட்டுள்ளது. இங்குள்ள பளிங்கு கற்களில் பல்வேறு போா்களில் உயிரிழந்த 25,942 வீரா்களின் பெயா்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நினைவிடத்தை பிரதமா் மோடி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி திறந்து வைத்தாா்.
இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி, இந்த நினைவிடத்தில் பிரதமா் மோடி மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகே, குடியரசு தின விழாவில் அவா் கலந்து கொண்டாா்.