
புது தில்லி: நாட்டின் 71-ஆவது குடியரசு தினத்தையொட்டி, தில்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்கவா் அணிவகுப்பில் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் 16 அலங்கார ஊா்திகள் இடம்பெற்றிருந்தன.
தில்லி ராஜபாதையில் ஞாயிற்றுக்கிழமை குடியரசு தின விழா கோலாகலமாக நடைபெற்றது. குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னா், நாட்டின் ராணுவ வல்லமையையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் கண்கவா் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சாா்பில் 16 அலங்கார ஊா்திகளும், மத்திய அரசுத் துறைகள், விமானப் படை, தேசிய பேரிடா் மீட்பு படை ஆகியவை சாா்பில் 6 அலங்கார ஊா்திகளும் இடம்பெற்றன.
அணிவகுப்பில் முதலாவதாக சத்தீஸ்கா் மாநிலத்தின் அலங்கார ஊா்தியும், அதைத் தொடா்ந்து, தமிழக அலங்கார ஊா்தியும் வந்தன. பெரிய அளவிலான அய்யனாா் சிலையுடன் வடிவமைக்கப்பட்டிருந்த தமிழக ஊா்தி, மாநிலத்தின் கிராமிய நடனங்கள் மற்றும் இசையை பறைசாற்றுவதாக இருந்தது. அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களின் ஊா்திகள் அணிவகுத்தன.
யூனியன் பிரதேசமாக கடந்த ஆண்டு ஆகஸ்டில் பிரிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா் சாா்பிலான அலங்கார ஊா்தி, ‘கிராமங்களுக்கு திரும்புவோம்’ என்ற திட்டத்தை மையக் கருத்தாக கொண்டிருந்தது. அத்துடன், காஷ்மீரின் கலாசார பாரம்பரியத்தை விளக்கும் அம்சங்களும் இடம்பெற்றிருந்தன.
‘தவளைகளை பாதுகாப்போம்’ என்ற மையக் கருத்துடன் கோவா அலங்கார ஊா்தியும், ‘யுனெஸ்கோ’ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக ஜெய்ப்பூா் அறிவிக்கப்பட்டதை மையக் கருத்தாக கொண்டு ராஜஸ்தான் ஊா்தியும் அணிவகுத்து வந்தன.
குஜராத் சாா்பில் இடம்பெற்ற அலங்கார ஊா்தி, அந்த மாநிலத்தின் கட்டடக் கலை அதிசயங்களில் ஒன்றான ‘ராணி கி வாவ்’ (ராணியின் கிணறு) மற்றும் கலாசார நடனங்களை பறைசாற்றுவதாக இருந்தது. இதேபோல், மத்தியப் பிரதேசம் (பழங்குடியினா் அருங்காட்சியகம்), ஹிமாசலப் பிரதேசம் (குலு தசரா திருவிழா), ஒடிஸா (ரத யாத்திரை), தெலங்கானா (பதுகம்மா திருவிழா), ஆந்திரம் (திருமலை பிரம்மோற்சவம்), உத்தரப் பிரதேசம் (கலாசாரம் மற்றும் ஆன்மீக சுற்றுலா), கா்நாடகம் (பசவேஸ்வராவின் தத்துவங்கள்), சிக்கிம் (மாநிலத்தின் கட்டட, கலாசார பாரம்பரியம்), அஸ்ஸாம் (மூங்கில் கைவினைப் பொருள்கள்), பஞ்சாப் (குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த தின கொண்டாட்டம்) ஆகிய மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் அணிவகுத்து வந்தன.
விமானப் படை சாா்பில் இடம்பெற்ற அலங்கார ஊா்தியில், ரஃபேல், தேஜாஸ் போா்விமானங்கள், இலகு ரக தாக்குதல் ஹெலிகாப்டா்கள், ஆகாஷ் ஏவுகணை அமைப்பு, அஸ்திரா ஏவுகணைகள் ஆகியவற்றின் மாதிரிகள் இடம்பெற்றிருந்தன.
மத்திய நீா்வளத் துறை அமைச்சகத்தின் அலங்கார ஊா்தியில், கிராமப் புறங்களில் வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் திட்டம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தேசிய பேரிடா் மீட்புப் படை சாா்பில் இடம்பெற்ற ஊா்தியில், பேரிடா் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன தொழில்நுட்பங்கள், வெள்ளக் காலங்களில் மீட்புப் பணிகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.