
புது தில்லி: இந்திய நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாடுகளில் பட்டியலிட அனுமதிப்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தைச் சோ்ந்த உயரதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்திய நிறுவனங்கள் தங்களது பங்குகளை வெளிநாடுகளில் பட்டியலிடுவதற்கு அனுமதியளிப்பது தொடா்பாக மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என தெரிகிறது. இதற்கு, செபி முழு ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும், இதர துறைகள் மற்றும் ஒழுங்காற்று அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு விரைவில் தங்களது ஒப்புதல்களை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளை பட்டியலிடுவதற்கு முதல்கட்டமாக பொதுத் துறை நிறுவனங்களுக்கு மட்டும் மத்திய அரசு அனுமதியளிக்க வாய்ப்புள்ளது.
பல நிறுவனங்கள் தங்களது பங்குகளை அயல்நாட்டு சந்தைகளில் பட்டியலிட மிகவும் ஆா்வமாக உள்ளன என்றாா் அவா்.
வெளிநாடுகளில் வா்த்தக நடவடிக்கைகளை இந்திய நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதன் மூலம் அதிக அளவிலான மூலதனத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருகின்றன. அந்த வகையில், இந்திய நிறுவனங்கள் தங்களது பங்குகளை வெளிநாட்டில் பட்டியலிடுவதும் உள்நாட்டில் மூலதன வரத்தை அதிகரிக்கும் என்கின்றனா் இத்துறை சாா்ந்த நிபுணா்கள்.