கருணை மனு நிராகரிப்புக்கு எதிராக நிர்பயா குற்றவாளி மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து, அதை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்கிறது
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்ததையடுத்து, அதை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் நாளை (திங்கள்கிழமை) விசாரிக்கிறது.

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷ் குமார் சிங் (32) தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பியிருந்தாார். அந்த மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் ஜனவரி 17-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, கருணை மனு நிராகரித்ததை நீதித்துறை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 25-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையடுத்து, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே, ஒருவர் தூக்கிலிடப்பட உள்ளார் என்றால், அதைவிட அவசர வழக்கு வேறு எதுவும் இல்லை என்றார். மேலும், வழக்கை பட்டியலிடுவது தொடர்பாக பதிவாளரிடம் சென்று முறையிடுமாறும் வழக்குரைஞருக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை பகல் 12.30 மணிக்கு விசாரிக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பாணுமதி, அசோக் பூஷண் மற்றும் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரிக்கிறது.

முன்னதாக, நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத் தண்டனையை பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றுமாறு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் சீராய்வு மனுவை நிராகரித்த நிலையில் கருணை மனுவை முகேஷ் குமார் அனுப்பியிருந்தார். முகேஷ் குமார் மனுவுடன் மற்றொரு குற்றவாளியான அக்ஷய் குமாரின் (31) சீராய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கின் இதர குற்றவாளிகள் பவன் குப்தா, வினய் குமார் சர்மா ஆகியோர் இன்னும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை.

கடந்த 2012-ஆண்டு டிசம்பரில் துணை மருத்துவ மாணவி ‘நிர்பயா’ பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நால்வரில் வினய் சர்மா (26), முகேஷ் சிங் (32) ஆகியோரின் சீராய்வு மனு அண்மையில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, நால்வரின் தூக்குத் தண்டனையும் நீதிமன்ற உத்தரவுப்படி பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்றப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com