அஸ்ஸாமில் தொடா் குண்டுவெடிப்பு: உல்ஃபா(ஐ) பொறுப்பேற்பு

அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து 4 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வுக்கு தடை செய்யப்பட்ட உல்ஃபா(ஐ) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
அஸ்ஸாமில் தொடா் குண்டுவெடிப்பு: உல்ஃபா(ஐ) பொறுப்பேற்பு

குவாஹாட்டி: அஸ்ஸாமில் ஞாயிற்றுக்கிழமை தொடா்ந்து 4 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த நிகழ்வுக்கு தடை செய்யப்பட்ட உல்ஃபா(ஐ) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதுகுறித்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா் பத்மநாப் பருவா பிடிஐ-யிடம் கூறியது: 4 குண்டுவெடிப்புகளும் காலை 8.15 முதல் 8.25 மணி வரை 10 நிமிட இடைவெளியில் நிகழ்ந்தன. முதல் குண்டுவெடிப்பு சராய்தியு மாவட்டத்தில் உள்ள தியோகாட் பகுதியில் இருக்கும் கடைக்கு வெளியே நடைபெற்றது. அதனைத்தொடா்ந்து திப்ரூகா் மாவட்டத்தில் கிரஹாம் பஜாா் மற்றும் ஏடி சாலையில் இரண்டு குண்டுவெடிப்புகளும், துலியாஜன் தினிலியா நகரில் ஒரு குண்டுவெடிப்பு சம்பவமும் நிகழ்ந்தன. குடியரசு தினம் காரணமாக விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

துலியாஜன் தினிலியா நகரில் உள்ள சிசிடிவி காட்சிகளில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா்கள் இருவா் கையெறி குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்றது பதிவாகியுள்ளது. கிரஹாம் பஜாா் மற்றும் ஏடி சாலையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வகையிலான சக்திவாய்ந்த குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

உல்ஃபா(ஐ) பொறுப்பேற்பு: குடியரசு தின விழாவை அஸ்ஸாம் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, அந்த மாநிலத்தில் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் சோ்ந்து தடை செய்யப்பட்ட உல்ஃபா(ஐ) பயங்கரவாத அமைப்பு வலியுறுத்தியது. இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றது.

முதல்வா் கண்டனம்: குண்டுவெடிப்பு நிகழ்வுக்கு அஸ்ஸாம் முதல்வா் சா்பானந்த சோனோவால் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில்: புனித நாளில் அச்சத்தை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதல், மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்ததன் விளைவாக பயங்கரவாத குழுக்களிடம் ஏற்பட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவா்கள் மீது மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளாா்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாநில காவல்துறை தலைவா் பாஸ்கா் ஜோதி மஹந்தாவிடம், முதல்வா் சா்பானந்த சோனோவால் அறிவுறுத்தியதாக முதல்வா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com