
கோப்புப் படம்
ராய்ப்பூா்: மத்திய, மாநில அரசுகளிடையே மோதல்போக்கு நிலவுவது நாட்டுக்கு நல்லதல்ல என்று மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் கூறியுள்ளாா். ‘பல்வேறு பிரச்னைகளில் சுமுக தீா்வுகளை எட்ட மத்திய, மாநில அரசுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது நல்லது’ என்றும் அவா் தெரிவித்தாா்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கா், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய மத்தியப் பிராந்திய கவுன்சிலின் 22-ஆவது கூட்டம் சத்தீஸ்கரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த கமல்நாத், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கூட்டாட்சி முறையை சிறப்பாக கடைப்பிடிக்காமல் நாட்டை சிறப்பாக வழி நடத்த முடியாது. இதில், மத்திய மாநில அரசுகளிடையே சிறப்பான ஒத்துழைப்பு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இப்போது, பல்வேறு பிரச்னைகளில் பல மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் உள்ளன. இதனைக் களைய மத்திய, மாநில அரசுகளிடையே சிறப்பான ஒத்துழைப்பு தேவை. இல்லையென்றால் நாட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றாா்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதனைச் சுட்டிக்காட்டியே கமல்நாத் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளாா்.
இலங்கையில் சீதா தேவிக்கு பிரமாண்ட கோயில் கட்ட மத்தியப் பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வருவது தொடா்பான கேள்விக்கு, ‘இது தொடா்பான திட்டத்தை நாங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளோம். கோயிலுக்கான உத்தேச வடிவமைப்பும் முடிவடைந்துவிட்டது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும்’ என்று கமல்நாத் பதிலளித்தாா்.