சர்ச்சைக்குரிய வகையில் பேச்சு: மத்திய அமைச்சர் மற்றும் எம்.பியின் பெயர்கள் பிரசார பட்டியலில் இருந்து நீக்கம்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாக, மத்திய அமைச்சர் மற்றும் எம்.பியின் பெயர்கள் தேர்தல் பிரசார பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாக, மத்திய அமைச்சர் மற்றும் எம்.பியின் பெயர்கள் தேர்தல் பிரசார பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு வருகிற பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 11ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நிலவும் கடும் போட்டியின் காரணமாக கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்கிறது.

தில்லியின் ரித்தாலா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மணீஷ் சவுத்ரிக்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில், அக்கட்சியின் நட்சத்திர பேச்சாளரும் மத்திய இணையமைச்சருமான அனுராக் தாக்கூர் கலந்து கொண்டார். அப்போது அவர், 'தேசத் துரோகிகளை சுட்டுத் தள்ளுங்கள்' என பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதுதொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதேபோல் தில்லியின் ஷாஹீன் பாகில் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்து பாஜக மக்களவை எம்.பி. பர்வேஷ் வர்மாவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதமாகவும் இவர்கள் இருவரும் பேசியதாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புகாரளித்தன. தொடர்ந்து, இது தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.     

இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதன் காரணமாக,  அனுராக் தாக்கூர் மற்றும் பர்வேஷ் வர்மாவின் பெயர்கள் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களுக்கான தேர்தல் பிரசார பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அடுத்த உத்தரவு வரும் வரை அவர்கள் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com