யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றி பெற்றுள்ள பேருந்து நடத்துநர்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் ஒருவர் யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 
பேருந்து நடத்துநர் மது
பேருந்து நடத்துநர் மது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் ஒருவர் யுபிஎஸ்சி மெயின் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். 

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மது. இவர் தற்போது பெங்களூரு மாநகரப் போக்குவரத்து ஆணையத்தில், பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வருகிறார்.   மது தனது 19 வயதில் பள்ளிப்படிப்பை முடித்தவுடன் நடத்துநர் பணியில் சேர்ந்தார்.  பின்னர் தொலைதூரக் கல்வி வழியாகவே பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பினை நிறைவு செய்துள்ள அவர், தற்போது அரசியல் அறிவியல் பிரிவில் முதுகலைப்  பட்டம் பெற்றுள்ளார். அரசுப் பணியில் சேர வேண்டும் என்ற விருப்பத்தில் 2014-ஆம் ஆண்டு கர்நாடக ஆட்சிப்பணித் தேர்வு எழுதிய அவர் அதில் தோல்வியடைந்தார். இருந்தபோதும் மனம் தளராது 2018-ஆம் ஆண்டு அவர் யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகத் துவங்கினார். முதல் முயற்சியில் மீண்டும் தோல்வி; இருந்த போதிலும் தொடந்து முயன்ற அவர் 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றார். தொடர்ந்து மெயின் தேர்வுகளுக்கு கடினமாகத் தயாராகி வந்தார். முடிவில் இந்த வருடத் துவக்கத்தில் வெளியான யுபிஎஸ்சி மெயின் தேர்விலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அவரது குடும்பத்தில் முதன்முதலாக பள்ளிப்படிப்பை முடித்தவரான மது தற்போது மார்ச் 25-ஆம் தேதி நடைபெற உள்ள நேர்முகத் தேர்விற்குத் தயாராகி வருகிறார்.   

குறிப்பிடத்தக்க ஓர் விஷயம் என்றால் மது இந்தத் தேர்வுகளுக்காக எந்த ஆன்லைன் மெட்டீரியல் மூலமும் தயாராகவில்லை. அவருடைய துறைச் செயலாளரான ஷிகா என்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிதான் மதுவிற்கு தேர்வுகளுக்கு தயாராவதற்கு உதவி செய்துள்ளார். தற்போது மதுவின் அலுவலக மூத்த அதிகாரிகளும் மதுவிற்கு உதவி செய்துவருவதாக கூறப்படுகிறது.

மது பொதுவாக தன்னுடைய எட்டு மணி நேர பணிநேரம் போக மீதமுள்ள நேரத்தை படிப்பிற்காக செலவிட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வரை முழு முயற்சியுடன் படித்து தற்போது மெயின் தேர்வில் வெற்றி கண்டுள்ளார்.அதேபோல அதிகாலை 4 மணிக்கே எழுந்து படிப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தனது வெற்றி குறித்து குடும்பத்தார் என்ன நினைக்கிறாரக்ள் என்பது குறித்துக் கூறிய மது, 'நான் என்ன தேர்வு எழுதுகிறேன் என்பது பற்றி கூட அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் நான் ஏதோ நல்ல விஷயம் செய்திருக்கிறேன் என்பது மட்டும் தற்போது அவர்களுக்கு புரிந்திருக்கிறது' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com