அயோத்தி விவகாரத்தில் மக்கள் நடந்துகொண்ட முறை பாராட்டுதலுக்குரியது: ராம்நாத் கோவிந்த்

2021 -21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வெள்ளிக்கிழமை சிறப்புரையாற்றினார். அதில் அயோத்தி விவகாரத்தில் மக்கள் நடந்துகொண்ட முறை பாராட்டுதலுக்குரியது
அயோத்தி விவகாரத்தில் மக்கள் நடந்துகொண்ட முறை பாராட்டுதலுக்குரியது: ராம்நாத் கோவிந்த்

2021 -21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வெள்ளிக்கிழமை சிறப்புரையாற்றினார். அதில் அயோத்தி விவகாரத்தில் மக்கள் நடந்துகொண்ட முறை பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தனது 2ஆவது ஆட்சிக் காலத்தின் 2-ஆவது பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்கிறது. நாடாளுமன்ற நாள் குறிப்பின்படி, 2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணியளவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இதுவாகும்.

இதன் சிறப்புரையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசுகையில்,

நமது அரசியலமைப்பானது இந்த நாடாளுமன்றத்திலிருக்கும் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் நாட்டு மக்களின் நம்பிக்கையையும், தேவையையும் பூர்த்திசெய்து அவர்களுக்கு தேவையான சட்டங்களை உருவாக்கி, தேசிய நலனைப் பாதுகாப்பதை மிக முக்கியமாக வைத்திருக்கிறது.

அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து நாட்டு மக்கள் நடந்துகொண்ட முதிர்ச்சியான முறை பாராட்டுதலுக்குரியது.

பரஸ்பர கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் மட்டுமே ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துகின்றன. அதே நேரத்தில், எதிர்ப்பு மற்றும் போராட்டம் என்ற பெயரில் நடைபெறும் எந்தவொரு விதமான வன்முறையும் சமூகத்தையும், நாட்டையும் பலவீனப்படுத்துகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை மூலம் அரசியலமைப்பின் 370ஆவதுப் பிரிவு மற்றும் 35 ஏ பிரிவு ரத்து செய்யப்பட்டது வரலாற்று ரீதியானது மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளின் சம வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது.

குருநானக் 550ஆவது ஜயந்தியை முன்னிட்டு கர்தார்பூர் வழித்தடம் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக ஏற்படுத்தி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மத்திய அரசாங்கத்தின் சிறப்புக் கோரிக்கையின் பேரில், ஹஜ் புனித யாத்திரை ஒதுக்கீட்டை சவூதி அரேபியா எந்த காரணமுமின்றி அதிகரித்தது. இதன் காரணமாக 2 லட்சம் இந்திய முஸ்லிம்கள் இம்முறை ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டனர். ஹஜ் பயணத்தின் முழுச் செயல்முறையும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் முறையில் செயல்படுத்திய முதல் நாடு இந்தியா.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றி இயற்றப்பட்டதன் மூலம் மகாத்மா காந்தியின் விருப்பம் நிறைவேறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த நூற்றாண்டை பாரதத்தின் நூற்றாண்டாக அமைக்க கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்த தசாப்தம் நமது நாட்டுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. பல சீர்திருத்தங்களின் மூலம் உலகளாவிய அளவில் சிறந்த வர்த்தக ரீதியாக இந்தியாவை முன்னேற்ற முடிந்தது. 

அரசின் அனைத்து முயற்சிகளும்,  திட்டங்களும் சாதி, மத பேதமின்றி ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து திட்டங்களும் தேவைப்படும் அனைத்து மக்களுக்கும் முறையாகச் சென்று சேருகிறது.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்களுக்கான சந்தை விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் தங்களின் செலவீனத் தொகையில் இருந்து 1.5 சதவீத லாபத்தை பெறத் தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com