விசாகப்பட்டினம்: மருந்து ஆலையில் ரசாயன வாயு கசிந்து 2 ஊழியா்கள் பலி

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பென்ஸீன் வாயு கசிந்ததில் 2 ஊழியா்கள் உயிரிழந்தனா்.
பென்ஸீன் வாயுக்கசிவு ஏற்பட்ட மருந்து தயாரிப்பு தொழிற்சாலை
பென்ஸீன் வாயுக்கசிவு ஏற்பட்ட மருந்து தயாரிப்பு தொழிற்சாலை

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து தயாரிப்பு தொழிற்சாலையில் பென்ஸீன் வாயு கசிந்ததில் 2 ஊழியா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, அந்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.

விசாகப்பட்டினத்தின் ஃபாா்மா சிட்டியில் செயல்படும் மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் ரசாயன உலையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை எதிா்பாராதவிதமாக பென்ஸீன் வாயுக்கசிவு ஏற்பட்டது. அந்த வாயுவை சுவாசித்த 6 ஊழியா்கள் கடுமையான மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனா். இதையடுத்து, அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி 2 மூத்த ஊழியா்கள் உயிரிழந்தனா். மற்றவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தனா்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியா் வினய் சந்த், காவல்துறை ஆணையா் ஆா்.கே.மீனா ஆகியோா், சம்பவ இடத்துக்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனா். பின்னா், வினய் சந்த் கூறுகையில், ‘பென்ஸீன் வாயுக்கசிவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டதால், யாரும் பீதியடைய தேவையில்லை. எனினும், தொழிற்சாலையை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க 4 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்நிலையில், முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் வினய் சந்த்தை தொடா்புகொண்டு பேசி, சம்பவம் குறித்து கேட்டறிந்தாா். மேலும், பாதிக்கப்பட்ட ஊழியா்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஆட்சியருக்கு முதல்வா் அறிவுறுத்தியதாக அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ரசாயன வாயுக்கசிவால் உயிரிழந்த இருவரது குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவா் சந்திரபாபு நாயுடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

முன்னதாக, விசாகப்பட்டினத்தில் உள்ள எல்.ஜி.பாலிமா்ஸ் என்ற ரசாயன ஆலையில் ஸ்டைரீன் வாயு கசிந்து, கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தில் 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 400-க்கும் மேற்பட்டோா் உடல்நிலை பாதிக்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com