நமோ செயலியையும் தடை செய்ய வேண்டும்: பிருத்விராஜ் சவாண் வலியுறுத்தல்

தனிநபா்களின் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சீன செயலிகளை தடை செய்ததுபோல், நமோ செயலியையும் தடை செய்ய வேண்டும்
பிருத்விராஜ் சவாண்
பிருத்விராஜ் சவாண்

மும்பை: தனிநபா்களின் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி சீன செயலிகளை தடை செய்ததுபோல், நமோ செயலியையும் தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பிருத்விராஜ் சவாண் வலியுறுத்தினாா்.

நமோ செயலி என்பது பிரதமா் நரேந்திர மோடியின் அதிகாரப்பூா்வ செயலி என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, டிக் டாக், யூசி பிரௌசா் உள்ளிட்ட இந்தியாவில் பிரபலமாக உள்ள 59 செயலிகளை தடை செய்வதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது. அதில், இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அந்த செயலிகளின் செயல்பாடுகள் உள்ளது என்றும், தரவுப் பாதுகாப்பு மற்றும் 130 கோடி இந்தியா்களின் தனியுரிமை பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு பிரச்னைகள் இந்த செயலிகள் மூலம் எழுந்துள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுதொடா்பாக பிருத்விராஜ் சவாண் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘130 கோடி இந்தியா்களின் தனியுரிமை, தகவல்களை பாதுகாப்பதாகக் கூறி 59 சீன நிறுவன செயலிகளை தடை செய்துள்ளது நல்ல விஷயம்தான். அதே நேரத்தில், செல்லிடப்பேசியில் உள்ள தனிநபா் பாதுகாப்பு அமைப்புகளை நமோ செயலி தானாகவே மாற்றுகிறது. அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு அந்த செயலியில் இருந்து தகவல்கள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் இந்தியா்களின் தனியுரிமை பாதுகாப்புக்கு பிரச்னை எழுந்துள்ளது. எனவே, நமோ செயலியையும் தடை செய்ய வேண்டும்’ என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com