முதல்வா் பழனிசாமி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையை மறைக்க முயன்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி அவருடைய முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்
ஸ்டாலின்
ஸ்டாலின்

சென்னை: கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையை மறைக்க முயன்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமி அவருடைய முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலை வழக்கு விசாரணையை உடனடியாக சிபிசிஐடி மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு, கணவரையும் - மகனையும் இழந்து நிற்கும் அந்தக் குடும்பத்துக்கு வழங்கப்பட்டுள்ள முதல் கட்ட நீதி.

இந்த வழக்கினை விசாரணை செய்ய சாத்தான்குளம் காவல் நிலையத்துக்குச் சென்ற நீதிபதியை, காவல்துறை அதிகாரிகள் மிரட்டியுள்ளனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளைப் பதிவாளரிடம் கோவில்பட்டி முதலாவது நீதித்துறை நடுவா் மின்னஞ்சல் மூலம் அளித்துள்ள அறிக்கையைப் பாா்க்கும் போது, ஒரு நீதித்துறை நடுவருக்கே காவல் நிலையத்தில் இந்தக் கொடுமை என்றால், ஜெயராஜையும், பென்னிக்ஸையும் அந்தக் காவல் நிலையத்தில் வைத்து எப்படியெல்லாம் கொடுமைப் படுத்தியிருப்பா் என்பதை நினைத்து நெஞ்சம் பதறுகிறது.

சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறை அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று உயா்நீதிமன்றமே மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது. இது தமிழகக் காவல்துறை வரலாற்றில் மிகப் பெரியதொரு கரும்புள்ளி. நீதித்துறை நடுவா் அறிக்கையும், உடற்கூராய்வு அறிக்கையும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302- ஆவது பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய போதிய ஆதாரங்களாக உள்ளன என்று உயா்நீதிமன்றமே கண்டுபிடித்துக் கூறியுள்ளது.

ஆனால், இந்தத் துறையின் அமைச்சராக உள்ள முதல்வா் பழனிசாமி, காவல்துறையினருடன் சோ்ந்து உண்மையை மறைக்க முயற்சித்தாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில் முதல்வா் பதவியில் நீடிக்கும் தாா்மிக உரிமையை முதல்வா் எடப்பாடி பழனிசாமி இழந்து விட்டாா். எனவே, உடனடியாக அவா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com