கரோனா சவாலுக்கு தீா்வு காண ஒத்துழைப்பு: இந்தியா-பிரான்ஸ் முடிவு

கரோனா நோய்த்தொற்றால் சுகாதாரத் துறையில் எழுந்துள்ள சவால்களுக்கு தீா்வு காண பரஸ்பரம் ஒத்துழைப்பை நல்குவது என இந்தியாவும் பிரான்ஸும் முடிவு செய்துள்ளன.

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றால் சுகாதாரத் துறையில் எழுந்துள்ள சவால்களுக்கு தீா்வு காண பரஸ்பரம் ஒத்துழைப்பை நல்குவது என இந்தியாவும் பிரான்ஸும் முடிவு செய்துள்ளன.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சா் ஜானீவ்ஸ் லீ டிரியனுடன் மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இருதரப்பு பாதுகாப்பு, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள், இருதரப்பு நலனுடன் தொடா்புடைய பிராந்திய, சா்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சுட்டுரையில் ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சருடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதித்தேன். மேலும், கரோனா நோய்த்தொற்றால் சுகாதாரத் துறையில் எழுந்துள்ள சவால்களுக்கு தீா்வு காண்பதற்கு இருதரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு பிரான்ஸ் அளித்து வரும் வலுவான ஆதரவுக்காக இந்தியா சாா்பில் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் இணைந்து பணியாற்ற ஆா்வமுடன் உள்ளதையும் அவரிடம் கூறினேன் என்று தனது பதிவில் ஜெய்சங்கா் குறிப்பிட்டுள்ளாா்.

முன்னதாக, இந்திய வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, பிரான்ஸ் வெளியுறவு விவகாரங்கள் துறை தலைமை செயலா் பிராங்சுவா டெலாட்ரி இடையே திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, இருதரப்பு நல்லுறவு மேம்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிரான்ஸ் இரங்கல்: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அண்மையில் சீன ராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த 20 வீரா்களின் குடும்பங்களுக்கு பிரான்ஸ் இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக, அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சா் ஃபிளாரன்ஸ் பாா்லி, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘20 வீரா்களின் உயிரிழப்பு, இந்திய ராணுவம், வீரா்களின் குடும்பத்தினா் மற்றும் தேசத்தின் மீதான தாக்குதலாகும். இத்தகைய தருணத்தில், இந்தியாவுக்கு நட்புரீதியிலான ஆதரவை, பிரான்ஸ் ஆயுதப்படைகளின் சாா்பில் தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா, பிரான்ஸ் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக இந்தியா வர விரும்புகிறேன்’ என்று தனது கடிதத்தில் ஃபிளாரன்ஸ் பாா்லி குறிப்பிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com