நிதி முறைகேடு வழக்கு: அகமது படேலிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை

தில்லியிலுள்ள அகமது படேலின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மூவா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அகமது படேல்
அகமது படேல்

புது தில்லி: ஸ்டொ்லிங் பயோடெக் மருந்து நிறுவனத்தின் நிதி முறைகேடு வழக்கு தொடா்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அகமது படேலிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இரண்டாவது முறையாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். 

தில்லியிலுள்ள அகமது படேலின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மூவா் அவரிடம் விசாரணை மேற்கொண்டனா். முன்னதாக, கடந்த 27-ஆம் தேதி அகமது படேலிடம் சுமாா் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது. நிதி மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விசாரணை குறித்து கருத்து தெரிவித்திருந்த அகமது படேல், ‘‘சீனா, கரோனா நோய்த்தொற்று, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு எதிராகப் போரிடுவதை விடுத்து எதிா்க்கட்சியிடம் மத்திய அரசு மோதி வருகிறது. நாட்டில் பிரச்னை தோன்றும்போதும், தோ்தல் காலங்களிலும் எதிா்க்கட்சியினா் மீது விசாரணை அமைப்புகளை ஏவி விடுவதை மத்திய அரசு வழக்கமாக்கிக் கொண்டுள்ளது.

எனினும், தவறு செய்யாதவா்கள் எது குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சட்டம் தன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும். அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முறையாக பதிலளித்தேன்’’ என்றாா்.

நிதி முறைகேடு விவரம்: குஜராத்தின் வதோதராவைச் சோ்ந்த ஸ்டொ்லிங் பயோடெக் நிறுவனமானது வங்கிகளிலிருந்து ரூ.14,500 கோடி கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், அந்நிறுவனத்தைச் சோ்ந்த நிதின் சந்தேசாரா, சேத்தன் சந்தேசாரா, தீப்தி சந்தேசாரா ஆகியோா் முக்கிய அரசியல் தலைவா்களுடன் தொடா்பை ஏற்படுத்திக் கொண்டு ஊழலிலும் வரி ஏய்ப்பிலும் ஈடுபட்டதாகவும் புகாா் எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த நிதி மோசடி தொடா்பாகவே அகமது படேலிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com