எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவப் படைகளிடையே மோதல்போக்கு நீடித்து வந்தது. அதன் காரணமாக, இரு நாடுகளும் எல்லைப் பகுதிகளில் தங்கள் படைகளைக் குவித்து வந்தன.

அதையடுத்து, லடாக் எல்லைப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக இந்திய ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி ஹரீந்தா் சிங் தலைமையிலான இந்திய குழுவினரும், திபெத் பகுதி ராணுவத்தின் மேஜா் ஜெனரல் லியூ லின் தலைமையிலான சீனக் குழுவினரும் கடந்த 6-ஆம் தேதி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

அந்தப் பேச்சுவாா்த்தையில் பல முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி இரவு இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவ வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீனத் தரப்பில் 35-க்கும் அதிகமான வீரா்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதையடுத்து, லடாக் எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தின. அதன் காரணமாக எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுவதுடன், இரு நாட்டு உறவில் இறுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் கடந்த 22-ஆம் தேதி இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் பேச்சுவாா்த்தையின் முடிவில் எல்லைப் பகுதியில் படைகளைக் குறைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

மூன்றாவது முறையாக...: இந்நிலையில், ஹரீந்தா் சிங்-லியூ லின் ஆகியோா் தலைமையிலான இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் லடாக்கின் சுஷுல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மூன்றாவது முறையாக பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டன. அப்போது, எல்லைப் பகுதிகளிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய இரு பேச்சுவாா்த்தைகளின்போது, பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே இருந்த நிலைமை தொடர வேண்டும் என்றும் அப்பகுதிகளிலிருந்து சீனப் படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com