தந்தை இறந்த சில மணி நேரங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

தந்தை இறந்த சில மணி நேரங்களிலேயே மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய சோக சம்பவம் நடந்துள்ளது.

கடாக்: தந்தை இறந்த சில மணி நேரங்களிலேயே மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய சோக சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில் இருந்து 380 கிமீ தொலைவில் உள்ள நகரம் கடாக். இங்குள்ள ஹெச்.பி.எஸ் துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் பஜாந்த்ரி (58). இவரது மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர்களது இளைய மகள் அனுஷா பஜாந்த்ரி (16). பத்தாம் வகுப்பு மாணவியான இவர், அங்குள்ள தொண்டதாவ்யா உயர் நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். தற்போது இம்மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்வுகளில் பங்கெடுத்து வருகிறார். வெள்ளியன்று இறுதித்தேர்வாக அவரின் மூன்றாவது மொழிப்பாடமான ஹிந்தித் தேர்வு நடைபெறுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் முதுகுத் தண்டில் நடைபெற்ற அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து சுரேஷ் சிறிதுகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.   வெள்ளியன்று காலை ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். இதனால் அனுஷா நிலைகுலைந்து போனாலும் மனதினைத் தேற்றிக் கொண்டு தைரியத்துடன் சென்று தேர்வினை எழுதியுள்ளார். பகல் 01.30 மணியளவில் தேர்வு முடிந்து திரும்பி தநதையின் இறுதிச்சடங்கில் பங்குபெற்றுள்ளார்.

இதுதொடர்பாக கடாக் வட்டார கல்வி அலுவலர் கேளடி மட்டா செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் கூறிய போது, ‘அனுஷா வேண்டுமானால் தேர்வை தற்போது தவிர்த்து விட்டு, ஆகஸ்டில் நடக்கும் துணைத் தேர்வுகளில் எழுதித் தேர்ச்சி பெறலாம் என்ற வாய்ப்பு அவர் முன் இருந்தது. ஆனால் தற்போதுள்ள கரோனா சூழ்நிலையால் ஏற்கனவே மார்ச்சில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடக்கின்றன, எனவே அதில் மேற்கொண்டும் தாமதம் வேண்டாம் என்பதற்காக மனதைத் தேற்றிக் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com