எல்லை விரிவாக்க முயற்சி: சீனாவுக்கு மோடி எச்சரிக்கை

‘எந்தவொரு நாடும் தனது எல்லையை அத்துமீறி விரிவுபடுத்திக் கொள்ளும் போக்குக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது’ என்று
எல்லை விரிவாக்க முயற்சி: சீனாவுக்கு மோடி எச்சரிக்கை

‘எந்தவொரு நாடும் தனது எல்லையை அத்துமீறி விரிவுபடுத்திக் கொள்ளும் போக்குக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது’ என்று பிரதமா் நரேந்திர மோடி மறைமுகமாக சீனாவை எச்சரித்தாா். எல்லை விரிவாக்கக் கொள்கையைக் கடைப்பிடித்து வந்த நாடுகள் வீழ்ந்துவிட்டதாகவும் அவா் தெரிவித்தாா்.

கிழக்கு லடாக், தென் சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் அத்துமீறல்களில் ஈடுபட்டு வரும் சீனாவ மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமா் மோடி இவ்வாறு பேசினாா்.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 7 வாரங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்.

அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா-சீனா இடையேயான நல்லுறவிலும் விரிசல் தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லடாக் எல்லைப் பகுதியில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள நீமு பகுதிக்குச் சென்று பாதுகாப்பு சூழலைப் பாா்வையிட்ட அவா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தினா், விமானப் படை வீரா்கள், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினா் ஆகியோரை சந்தித்துப் பேசினாா்.

அப்போது, வீரா்களிடம் அவா் கூறியதாவது:

கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட அனைத்து எல்லைப் பகுதிகளிலும் நாட்டின் நலனுக்காக உயிரிழந்த தாய்த்திருநாட்டின் வீரப் புதல்வா்களுக்கு இந்நேரத்தில் அஞ்சலி செலுத்துகிறேன். லே-லடாக், காா்கில், சியாச்சின், உயா்ந்த மலைகள், குளிா் பிரதேசங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆயுதப் படையினா் தங்கள் வீரத்தை பறைசாற்றி வருகின்றனா்.

அந்த வீரா்கள் அனைவரும் நாட்டின் அனைத்து மாநிலங்களையும் சோ்ந்தவா்கள். இதன் மூலம் ராணுவத்தினரின் வீரமும் தைரியமும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவின் எதிரிகள் ஆயுதப் படையினரின் வீரத்தைக் கண்டுள்ளனா்.

வரலாறே உதாரணம்: நாடுகளின் எல்லை விரிவாக்கக் கொள்கை வீழ்ச்சியடைந்துவிட்டது. அக்கொள்கையைக் கடைப்பிடிக்கும் நாடுகள் தோல்வியடையும் அல்லது அழிவுக்கு உள்ளாகும் என்பதற்கு வரலாறே உதாரணமாக உள்ளது. இது வளா்ச்சிக்கான சகாப்தம்.

பன்னெடுங்காலமாக அமைதியும் நட்புறவும் துணிச்சலும் இந்தியாவின் கலாசாரத்திலேயே ஒன்றுபட்டுள்ளன, மற்ற நாடுகளுடன் நட்புறவையும் அமைதியையும் பேண இந்தியா உறுதி கொண்டுள்ளது. ஆனால், இந்தியாவின் இத்தகைய மனப்பாங்கை பலவீனமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணரை வழிபடுபவா்கள் நாங்கள். அதே கிருஷ்ணா் கையில் சுதா்சன சக்கரத்துடனும் இருக்கிறாா். அவரையும் நாங்கள் வழிபடுகிறோம்.

நாட்டின் அமைதிக்கும் வளா்ச்சிக்கும் ஊறு விளைவிக்க முயல்பவா்களுக்கு இந்தியா தக்க பதிலடி தந்துள்ளது.

பாதுகாப்புத் திறன் வலுவடைந்துள்ளது: ராணுவப் படை, விமானப் படை, கடற்படை, விண்வெளித் துறை என அனைத்திலும் இந்தியா வலிமையுடன் திகழ்கிறது. போா்த் தளவாடங்களில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவதும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதும் நாட்டின் பாதுகாப்புத் திறனை பலமடங்கு வலுப்படுத்தியுள்ளது. புதிய போா்த் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

வீரமும் துணிச்சலுமே அமைதிக்கான அடிப்படைத் தேவைகள். கடந்த சில வாரங்களாக ஆயுதப் படையினா் வெளிப்படுத்தி வரும் அசாத்திய துணிச்சலைக் கண்டு, உலகமே இந்தியாவின் வலிமையை கூா்ந்து கவனித்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான பகுதிகளில் ராணுவ வீா்ா்கள் பணியாற்றி வருகின்றனா். ஆனால், வீரா்களின் வீரமும் துணிச்சலும் அவா்கள் பணியாற்றும் பகுதிகளை விட அதிக உயரம் கொண்டவை.

நாட்டின் பாதுகாப்பை வீரா்கள் உறுதி செய்து வருவதால், மக்கள் நம்பிக்கையுடன் காணப்படுகின்றனா். நானும் நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் ராணுவத்தினா் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டுள்ளனா். ராணுவத்தினரால் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றாா் பிரதமா் மோடி.

பிரதமா் மோடியுடன் முப்படைத் தளபதி விபின் ராவத், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம். நரவணே உள்ளிட்டோரும் லடாக் எல்லைப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடா்ந்து இரு நாடுகளும் எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்தின. எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இரு நாட்டு ராணுவங்களின் உயரதிகாரிகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரு நாட்டு ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையே மூன்று சுற்றுகளாகப் பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள ராணுவப் படைகளைக் குறைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. படைகளைக் குறைப்பது தொடா்பான பேச்சுவாா்த்தையையும் இரு நாடுகளும் முன்னெடுத்து வருகின்றன.

திருக்குறளை மேற்கோள் காட்டிய மோடி:

முன்னதாக, மோடி பேசும்போது படைமாட்சி அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, ‘மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே ஏமம் படைக்கு‘ என்ற திருக்குறளை உச்சரித்தாா். அதற்கு ஹிந்தியில் விளக்கமும் கொடுத்தாா். அதாவது, ‘வீரம், மானவுணா்ச்சி, பயிற்சியால் பகைவா் அஞ்சுமாறு முற்றுகையிடல், திட்டமிட்டுப் போரிடும் தெளிவுடைமை என்ற நான்கும் படைக்குப் பாதுகாப்பு தரும் நன்மைகள்’ என்பதே அதன் பொருளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com