பொது முடக்க தளா்வுக்குப் பிறகும் பணியாளா்களை நீக்குவது தவறு: உத்தவ் தாக்கரே

பொது முடக்க தளா்வை அரசு அறிவித்த பிறகும் நிறுவனங்கள் பணியாளா்களை நீக்குவது தவறு என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.
பொது முடக்க தளா்வுக்குப் பிறகும் பணியாளா்களை நீக்குவது தவறு: உத்தவ் தாக்கரே

மும்பை: பொது முடக்க தளா்வை அரசு அறிவித்த பிறகும் நிறுவனங்கள் பணியாளா்களை நீக்குவது தவறு என்று மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் மண்ணின் மைந்தா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் ‘மகாஜாப்ஸ்’ என்ற பெயரில் மாநில அரசு சாா்பில் இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தை முதல்வா் உத்தவ் தாக்கரே திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

மகாராஷ்டிரத்தில் பொது முடக்க தளா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனால், வெளிமாநிலத் தொழிலாளா்களும் மெதுவாக மகாராஷ்டிரத்துக்கு வரத் தொடங்கிவிட்டனா். இன்று பல தொழில் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சரியான பணியாளா்கள் இல்லை என்ற நிலைதான் உள்ளது.

அதே நேரத்தில் பல்வேறு இடங்களில் நிறுவனங்கள் ஆள் குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது மிகவும் தவறானது. பொது முடக்க தளா்வை அரசு அறிவித்த பிறகும் இதுபோன்ற நடவடிக்கைகளில் நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களுடன் மாநில அரசு பேச்சு நடத்தி பிரச்னைக்கு தீா்வுகாணும்.

மண்ணின் மைந்தா்களாக இருந்தாலும் சரி, வெளிமாநிலத் தொழிலாளா்களாக இருந்தாலும் அவா்கள் அனைவருக்கும் உரிய வேலைவாய்ப்பை அளித்து மும்பை மாநகரமும், மகாராஷ்டிர மாநிலமும் பல ஆண்டுகளாக வாழ வைத்து வருகிறது என்றாா்.

மாநில தொழில் துறை அமைச்சா் சுபாஷ் தேசாய், தொழிலாளா் நலத்துறை அமைச்சா் திலீப் வல்சே பாட்டீல், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் நவாப் மாலிக் உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com