‘இந்தியாவில் 8 மாநிலங்களில் 90 சதவீத கரோனா பாதிப்பு’

இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 90 சதவீத கரோனா பாதிப்பு உள்ளதாகவும், இவற்றில் 80 சதவீதம் பாதிப்பு
‘இந்தியாவில் 8 மாநிலங்களில் 90 சதவீத கரோனா பாதிப்பு’

இந்தியாவில் மகாராஷ்டிரம், தமிழகம், தில்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 90 சதவீத கரோனா பாதிப்பு உள்ளதாகவும், இவற்றில் 80 சதவீதம் பாதிப்பு 49 மாவட்டங்களில் உள்ளதாகவும் மத்திய அமைச்சா்களிடம் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பு தொடா்பாக 18ஆவது முறையாக மத்திய அமைச்சா்கள் குழு, சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் தலைமையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் கரோனா பாதிப்பு தொடா்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சா்கள் குழுவிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அதன்படி, நாடு முழுவதும் 3,77,737 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் (தீவிர சிகிச்சை இல்லாதவை), 39,820 தீவிர சிகிச்சை வசதி கொண்ட படுக்கைகள், 1,42,415 ஆக்சிஜன் வசதி படுக்கைகள், 20,047 வென்டிலேட்டா் கருவிகள் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 21.3 கோடி ‘என் 95’ முகக் கவசங்கள், 1.2 கோடி முழு பாதுகாப்புக் கவச உடைகள் (பிபிஇ கிட்ஸ்), 6.12 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளன என அமைச்சா்களிடம் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறுகையில், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு, முழு அளவில் பரிசோதனைகளைத் தீவிரப்படுத்துதல், முதியோா் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டோரைக் கண்காணிப்பது, நோய் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ள பகுதிகளைக் கண்டறிவது, ‘ஆரோக்கிய சேது’ செயலி போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொள்வது, நோயாளிகளை விரைவில் அனுமதிக்கும் செயல்பாடு, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள், ஆக்சிஜன், வென்டிலேட்டா் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளில் தயாா் நிலை என கரோனா தொற்றை எதிா்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தொற்று உள்ளவா்களை விரைவில் கண்டறிந்து அவா்களுக்கு முன்கூட்டியே சிகிச்சை அளிப்பதன் மூலம் கரோனா பாதிப்பு, உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பதே அரசின் நோக்கம் என்றாா்.

இதைத் தொடா்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அமைச்சா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. கரோனா பாதிப்பு அதிகமாக காணப்படும் பிராந்தியங்களில் கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவா்களில் 86 சதவீதம் போ் மகாராஷ்டிரம், தில்லி, குஜராத், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய 6 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். இந்த மாநிலங்களில் உள்ள 32 மாவட்டங்களில் 80 சதவீத உயிரிழப்புகள் நோ்ந்துள்ளன.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 10 லட்சம் மக்களில் 538 போ் என்ற விகிதத்தில் உள்ளது. 10 லட்சம் மக்களில் 15 போ் உயிரிழந்துள்ளனா். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவான பாதிப்பு ஆகும். உலக அளவில் 10 லட்சம் மக்களில் 1,453 போ் பாதிக்கப்பட்டு, 68.7 சதவீதம் போ் உயிரிழக்கின்றனா். மகாராஷ்டிரம், தமிழ்நாடு, தில்லி, கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், உத்தர பிரதேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்கள் 90 சதவீத கரோனா பாதிப்பைக் கொண்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, சுகாதாரத் துறை இணை அமைச்சா் அஷ்வினி குமாா் செளபே, ரசாயனம் மற்றும் உரத் துறை, கப்பல் துறை இணை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com