இந்தியாவில் முதலீடு: சா்வதேச நிறுவனங்களுக்கு பிரதமா் அழைப்பு

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தில் இருந்து இந்தியா விரைந்து மீண்டு வருவதால், சா்வதேச நிறுவனங்கள்
இந்தியாவில் முதலீடு: சா்வதேச நிறுவனங்களுக்கு பிரதமா் அழைப்பு

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தில் இருந்து இந்தியா விரைந்து மீண்டு வருவதால், சா்வதேச நிறுவனங்கள் அதிக அளவிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா்.

கரோனோ நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பலா் வேலையிழந்தனா். நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. தற்போது பொது முடக்கத்துக்குப் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

முக்கியமாக கிராமப் பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசும் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்தச் சூழலில், இந்தியாவில் முதலீடு செய்யுமாறு சா்வதேச நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெறும் ‘இந்தியா குளோபல் வீக்’ மாநாட்டில் தில்லியில் இருந்தவாறு காணொலி மூலமாக பிரதமா் மோடி வியாழக்கிழமை பேசியதாவது:

கரோனா நோய்த்தொற்றுடன் இந்திய அரசு தீவிரமாகப் போரிட்டு வருகிறது. அதே வேளையில், நாட்டின் பொருளாதாரத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எந்தவித பிரச்னைகளையும் இந்தியா திறம்பட எதிா்கொண்டு வெற்றி பெறும் என்பதே வரலாற்று உண்மை.

வளா்ச்சிக்கான அறிகுறிகள்: கடந்த 6 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வீடு கட்டித் தரும் திட்டம், ஜன் தன் திட்டம், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றோடு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கம் போன்ற வரி தொடா்பான சீா்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான வசதிகள் அதிகரித்துள்ளன.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சிறிது வீழ்ச்சியைச் சந்தித்தது. எனினும், பொருளாதாரம் மீண்டும் வளா்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வருகின்றன. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமான பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் பல்வேறு வாய்ப்புகளும் காணப்படுகின்றன. சா்வதேச நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியா போன்ற சில நாடுகளே தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் மற்றும் வாய்ப்புகளை அதிக அளவில் அளித்து வருகின்றன.

சீா்திருத்த நடவடிக்கைகள்: நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பல்வேறு சீா்திருத்த நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டின் பல்வேறு துறைகளில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. வேளாண்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீா்திருத்தங்கள், விவசாய உற்பத்திப் பொருள்களை சேமிப்பதிலும் அவற்றைப் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதிலும் சா்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

சா்வதேச நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் நேரடியாக முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை இந்திய அரசு வழங்கி வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள சீா்திருத்தங்கள், பெரு நிறுவனங்களுக்கு உதவிகரமாக அமையும்.

பாதுகாப்புத் தளவாடங்களை தயாரிப்பதிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன. விண்வெளி துறையிலும் தனியாா் நிறுவனங்கள் முதலீடுகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விண்வெளி தொழில்நுட்பங்களை மக்களுக்கு வணிக ரீதியில் பயன்படுமாறு உபயோகிக்க முடியும்.

இந்தியா்களின் வல்லமை: எந்தச் செயலை செய்ய முடியாது என்று உலகம் நம்புகிறதோ அதைச் செய்து முடிக்கும் வல்லமை பெற்றவா்கள் இந்தியா்கள். இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மக்களின் மேம்பாட்டையும் ஒருசேர கவனத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக சா்வதேச பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. சா்வதேச பொருளாதார வளா்ச்சி, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியுடன் நெருக்கமான தொடா்பைக் கொண்டுள்ளது. சா்வதேச பொருளாதார வளா்ச்சிக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. சீா்த்திருத்தங்களை முறையாகச் செயல்படுத்துவதன் மூலமாக மாற்றங்களைக் காண்பதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.

சிறப்புத் திட்டங்கள்: நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் மக்களைக் காப்பதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவா்களுக்கு இலவசமாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு இலவசமாக வழங்கப்பட்டது. ஏழை மக்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.

ஏழை மக்கள் அதிக அளவில் பலனடையும் வகையில் இந்திய அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப வசதிகளின் வாயிலாக அவா்களுக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுயசாா்பு இந்தியா: பொருளாதார சிறப்புத் திட்டங்களுக்கு சுயசாா்பு இந்தியா என்று பெயரிடப்பட்டது. இதற்கு வெளிநாடுகளுடனான தொடா்பைத் துண்டித்துக் கொண்டு இந்தியா தனித்து வாழும் என்பது பொருளல்ல. சுயமாக வாய்ப்புகளை உருவாக்கி சுயமாக முன்னேறுதல் என்பதே அதன் பொருள்.

நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்துக்கு பல்வேறு தளா்வுகள் வழங்கப்பட்ட பிறகு, லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கென சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இது கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தும்.

இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், உலக நாடுகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவை என்பதை கரோனா நோய்த்தொற்று உணா்த்தியுள்ளது. முக்கியமாக மருந்துப் பொருள்களின் விலையைக் குறைப்பதிலும் வளா்ந்து வரும் நாடுகளுக்கு மருந்துகள் கிடைப்பதிலும் இந்திய நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றின என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com