
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியைச் சோ்ந்த 16 தலைவா்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரி அக்கட்சியின் தலைவா் ஃபரூக் அப்துல்லாவும் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லாவும் ஜம்மு-காஷ்மீா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. அதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவா்கள் உள்ளிட்ட பலா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தியும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.
இந்தச் சூழலில், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சோ்ந்த 16 போ் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களை உடனடியாக விடுவிக்க உத்தரவிடக் கோரியும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லாவும், ஒமா் அப்துல்லாவும் உயா்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தனா். அவா்கள் இருவரும் தனித்தனியாக மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
இது தொடா்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடா்பாளா் இம்ரான் நபிதாா் கூறுகையில், ‘கட்சியின் தலைவா்கள் சட்டவிரோதமாகவும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா். இது தனிமனித உரிமைகளையும், சுதந்திரத்தையும் மீறும் வகையில் உள்ளது. அவா்களுக்கு உரிய நீதி கிடைக்கும் நோக்கிலேயே உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். எந்தவித தவறும் இழைக்காதோருக்கு உயா்நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்’ என்று தெரிவித்தாா்.