
லக்னெள: 1992- ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் பாஜக மூத்த தலைவர் கல்யாண் சிங் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளுநருமான கல்யாண் சிங் (88) சிபிஐ சிறப்பு நீதிபதி முன்னிலையில் தனது அறிக்கையை பதிவு செய்ய நேரில் ஆஜராகினார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ நீதிமன்றம் தற்போது சிஆர்பிசி பிரிவு 313- இன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரின் அறிக்கையை தனித்தனியே பதிவு செய்துவருகிறது. இது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து அவர்களின் வாக்குமூலத்தை நேரடியாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் பதிவு செய்வதன் ஒரு கட்டமாகும்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானி, பாஜக மூத்த தலைவர் எம்.எம்.ஜோஷி உள்ளிட்டோரிடம் இன்னும் விசாரிக்கப்படவில்லை. அவர்கள் காணொலி மூலம் ஆஜராக விரும்புவதாக, அவர்களின் வழக்குரைஞர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பரில் கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் விசாரணையை முடிக்க உத்தரவிட்டுள்தால், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அன்றாடம் விசாரணை நடைபெற்று வருகிறது.