
63 test positive for COVID-19 in UT since last 24 hrs
புதுவையில் புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,531 ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
புதுவையில் செவ்வாய்க்கிழமை 637 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 51 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், ஏனாமில் 10 பேருக்கும் என மொத்தம் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,531 ஆக உயர்ந்துள்ளது.
இதில் தற்போது கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 376 பேரும், ஜிப்மரில் 116 பேரும், கோவைட் கேர் சென்டரில் 112 பேரும், காரைக்காலில் 55 பேரும், ஏனாமில் 24 பேரும், மாஹேவில் ஒருவரும் என 654 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே 44 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 829 ஆக அதிகரித்துள்ளது. இறந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது என்றார் அவர்.
தற்போது நோய் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் அவர் .