இந்தியாவில் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் கூகுள் நிறுவனம்

இந்தியாவில் ரூ.75,000 கோடியை கூகுள் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். 
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடனான காணொலி வழி உரையாடலில் பிரதமர் மோடி. 
கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையுடனான காணொலி வழி உரையாடலில் பிரதமர் மோடி. 


புது தில்லி: இந்தியாவில் ரூ.75,000 கோடியை கூகுள் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்தார். 

கூகுள் நிறுவனம் இந்தியாவில் செயல்படுத்த உள்ள தனது திட்டங்களை அறிமுகம் செய்வதற்காக ஆண்டுதோறும் "கூகுள் ஃபார் இந்தியா' நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி காணொலி காட்சி மூலமாக திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது அந்த நிகழ்ச்சியில் இதுகுறித்து சுந்தர் பிச்சை வெளியிட்ட அறிவிப்பில்,"இந்தியாவை மின்னணுமயமாக்குவதற்காக செயல்படுத்தப்படவுள்ள திட்டத்துக்காக இந்தியாவில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடியை கூகுள் முதலீடு செய்ய உள்ளது.

ஒவ்வொரு இந்தியருக்கும் அவரவரின் தாய்மொழியிலேயே மிகவும் எளிமையான முறையில் தகவல்களை கிடைக்கச் செய்வது, இந்தியாவின் தனித்துவமான தேவைக்கு ஏற்றார் போன்ற சேவைகள், புதிய தயாரிப்புகளை கட்டமைப்பது, வர்த்தக நடவடிக்கைகள் மின்னணுமயமாக உருமாறுவதற்கான வசதியை மேம்படுத்துவது, சுகாதாரம், கல்வி, வேளாண் துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும்' என்று தெரிவித்தார்.

பிரதமருடன் உரையாடல்: இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியுடன் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை காணொலி மூலமாக உரையாடினார். 

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:

கரோனா வைரஸ் தொற்று சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள், அதனால் பல்வேறு துறைகள் எதிர்கொள்ளும் புதிய சவால்கள் குறித்து சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

மேலும், பொது முடக்க காலத்தில் இந்தியாவில் உருவாகியிருக்கும் புதிய பணிக் கலாசாரம், தரவுகள் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, சுகாதார சேவைகளை வழங்குவதில் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிப்பது, இணையக் குற்றங்கள், இணைய வழி அச்சுறுத்தல்கள் குறித்தும் பேசப்பட்டது.

விவசாயிகளுக்குப் பலனளிக்கும் தொழில்நுட்ப வசதிகள் குறித்தும், வேளாண்மைத் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் பேசிய மோடி, விவசாயிகளும், மாணவர்களும் மெய்நிகர் ஆய்வகங்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து சுந்தர் பிச்சையிடம் எடுத்துரைத்தார்.

இணையவழி கல்வியை விரிவுபடுத்துவது, தொழில்நுட்ப வசதியை தாய்மொழி மூலமாக அணுகுவது, மின்னணு பணப் பரிவர்த்தனையின் வளர்ச்சி போன்றவை குறித்தும் மோடி பேசினார். 

கூகுளின் திட்டங்கள்: இதைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனம் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்கள், முயற்சிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் சுந்தர் பிச்சை விளக்கினார். அப்போது, பெங்களூரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும், வெள்ள அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை கூகுள் வழங்குவதால் கிடைக்கும் பலன்கள் குறித்தும் விளக்கிய சுந்தர் பிச்சை, கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மோடி மேற்கொண்ட பொதுமுடக்கம் என்ற கடுமையான நடவடிக்கையின் காரணமாக, கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வலுவான அடித்தளத்தை அமைத்திருப்பதாகப் பாராட்டினார்.

Google invest Rs 75,000 crore in

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com