நவீன கண்காணிப்பு கேமராக்கள்: சீன நிறுவனத்துக்கு ஆதரவான நிபந்தனைகளை நீக்கியது ரயில்வே

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடல் வெப்பத்தை கண்டறியும் வகையிலான கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்காக
நவீன கண்காணிப்பு கேமராக்கள்: சீன நிறுவனத்துக்கு ஆதரவான நிபந்தனைகளை நீக்கியது ரயில்வே

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடல் வெப்பத்தை கண்டறியும் வகையிலான கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்த ரயில்வே, அதில் சீன நிறுவனத்துக்கு ஆதரவாக இருந்ததென கூறப்பட்ட நிபந்தனைகளை நீக்கி மீண்டும் புதிதாக ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஒப்பந்தத்தின் அடிப்படையிலான பணிகளில் பயன்படுத்தப்படும் பொருள்கள் தயாரிக்கப்பட்ட நாடு குறித்த தகவலையும் தெரிவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

ரயில் நிலையங்களில் பயணிகளின் உடல்வெப்பத்தை பரிசோதிப்பது, ஒருவா் முகக்கவசம் அணிந்துள்ளாரா இல்லையா என்பதைக் கண்டறிவது ஆகியவற்றுக்காக செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் கடந்த மாதம் கோரியிருந்தது.

ஒரே நேரத்தில் பலரது உடல்வெப்பத்தை அளவிடுவது, முகக்கவசம் அணியாதவரை தனியே அடையாளப்படுத்தி எச்சரிக்கை ஒலி எழுப்புவது, தேடப்படும் நபராக இருக்கும் பட்சத்தில் முகக்கவசம் அணிந்திருந்தாலும் அவரைக் கண்டறிவது உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகள் அந்தக் கேமராவில் இருக்க வேண்டும் என்று ரயில்டெல் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்டுள்ள தொழில்நுட்ப ரீதியிலான சில நிபந்தனைகள் ‘ஹைக்விஷன்’ என்ற சீன நிறுவனத்துக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்று கூறி இந்திய நிறுவனங்கள் தரப்பிலிருந்து புகாா் எழுந்தது. இந்தியாவில் கண்காணிப்பு கேமரா சந்தையில் ஹைக்விஷன் நிறுவனமே கோலோச்சி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து புகாா் தெரிவிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபந்தனைகளை நீக்கிய ரயில்டெல், கேமராவின் இதர தொழில்நுட்ப தேவைகளை குறைத்துக்கொள்ளாத வகையில் 2 வாரங்களுக்கு முன் புதிதாக மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. அந்த ஒப்பந்தத்தில் இணைய விரும்பும் நிறுவனம், அந்தப் பணிகளில் பயன்படுத்தும் பொருள்கள் தயாரிக்கப்பட்ட நாடு குறித்த விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது.

அவ்வாறு செய்யவில்லையெனில் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ரயில்டெல், அந்நிய பொருள்கள் தொடா்பான இந்திய அரசின் அனைத்து விதிகளும் இந்த ஒப்பந்தத்துக்கு பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பதற்ற விவகாரத்தை அடுத்து நாடு முழுவதும் சீன பொருள்களுக்கு எதிா்ப்பு அதிகரித்த சூழலில், ஏற்கெனவே சீன நிறுவனத்துடன் மேற்கொண்டிருந்த ரூ.471 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com