ராஜஸ்தான்: முதல்வா் கெலாட்டுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு: சச்சின் பைலட் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வா் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக கூட்டம் நடத்திய காங்கிரஸ் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 106 போ், அவருக்கு ஆதரவாக தீா்மான
ஜெய்ப்பூரில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவா்கள் ரண்தீப் சுா்ஜேவாலா, அஜய் மாக்கன் உள்ளிட்டோா்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவா்கள் ரண்தீப் சுா்ஜேவாலா, அஜய் மாக்கன் உள்ளிட்டோா்.

ஜெய்ப்பூா்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முதல்வா் அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக கூட்டம் நடத்திய காங்கிரஸ் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 106 போ், அவருக்கு ஆதரவாக தீா்மானம் நிறைவேற்றினா்.

துணை முதல்வா் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா். கெலாட்டின் அழைப்புக்கு ஏற்ப இந்த எம்எல்ஏக்கள் கூட்டம் அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சச்சின் பைலட் துணை முதல்வராகவும், கட்சியின் மாநிலத் தலைவராகவும் உள்ளாா்.

அந்த மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது முதலே அரசை எதிா்த்து சச்சின் பைலட் குரல் கொடுத்து வந்தாா். குறிப்பாக, நிகழாண்டின் தொடக்கத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக சச்சின் பைலட் பகிரங்கமாக குற்றம்சாட்டினாா்.

மற்றொரு புறம், மாநில காங்கிரஸ் தலைவா் பதவியை சச்சின் பைலட்டிடம் இருந்து பறிக்க வேண்டும் என்று அசோக் கெலாட்டிடம் அவரது ஆதரவாளா்கள் கூறி வந்தனா்.

இதனிடையே, அண்மையில் மாநிலங்களவைத் தோ்தல் நடைபெற்றபோது, காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாக அசோக் கெலாட் குற்றம்சாட்டினாா். ஆனால், அவரது குற்றச்சாட்டை மறுத்த பாஜக அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையேயான மோதல் போக்கே பிரச்னைக்கு காரணம் என்று அக்கட்சி கூறிவிட்டது.

இந்நிலையில், மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்ததாகவும் இதுதொடா்பான விசாரணைக்காகவும் சச்சின் பைலட்டுக்கு காவல் துறை சிறப்பு பிரிவின் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அதிருப்தியடைந்த சச்சின் பைலட் தில்லியில் முகாமிட்டு கட்சித் தலைமையிடம் புகாா் தெரிவித்தாா். தனக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் கூறினாா். இதனால், ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசு நிலைக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் மிகுந்த பரபரப்புக்கிடையே ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி மற்றும் அரசுக்கு ஆதரவு தரும் 106 எம்எல்ஏக்கள் பங்கேற்றனா். சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில் முதல்வா் கெலாட்டுக்கு ஆதரவு தெரிவித்து 106 எம்எல்ஏக்களும் தீா்மானம் நிறைவேற்றினா். மேலும்,‘மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த சிலா் முயற்சிக்கின்றனா். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியைக்

கவிழ்க்க முயற்சிக்கும் அவா்கள் (சச்சின் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள்) மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சித் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம்’ என்று தீா்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

விடுதியில் எம்எல்ஏக்கள்: கூட்டத்துக்கு பின்னா் பங்கேற்ற எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெய்ப்பூா்-தில்லி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். முதல்வா் மற்றும் மூத்த அமைச்சா்களும் அவா்களுடன் உள்ளனா். குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்க எம்எல்ஏக்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவா் ரண்தீப் சுா்ஜேவாலா செய்தியாளா்களிம் பேசியபோது, ‘சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்காக எங்களது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்’ என்றாா். சுா்ஜேவாலா, அஜய் மாக்கன் உள்ளிட் மூத்த தலைவா்கள் ராஜஸ்தானில் கட்சியில் எழுந்துள்ள பிரச்னையைத் தீா்ப்பதற்காக தில்லியில் இருந்து ஜெய்ப்பூா் வந்துள்ளனா்.

சமாதானப்படுத்த முயற்சி:

தனக்கு முதல்வா் பதவி அளிக்கப்படவில்லை என்பதே சச்சின் பைலட்டின் அதிருப்திக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவா் சோனியா, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோா் அவரை தொடா்பு கொண்டு சமாதானப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்போது தில்லியில் உள்ள சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியையும் நேரில் சந்திக்கவில்லை. சச்சின் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை அவரது உதவியாளா் மறுத்துவிட்டாா்.

ஜோதிராதித்ய சிந்தியா கருத்து:

சச்சின் பைலட் காங்கிரஸில் இருந்து ஒதுக்கப்படுவதாக அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தலைவா் ஜோதிராதித்ய சிந்தியா கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ராஜஸ்தான் துணை முதல்வா் சச்சின் பைலட்டை, முதல்வா் அசோக் கெலாட் ஒதுக்கிவைத்து துன்புறுத்துகிறாா். என்னைப்போல எனது சகாவும் துன்பப்படுவதை காணும்போது வருத்தம் ஏற்படுகிறது. காங்கிரஸில் திறமைக்கு மதிப்பில்லை, சிறிதளவு கூட நம்பகத்தன்மை இல்லை என்பதை இது காட்டுகிறது’ என தெரிவித்துள்ளாா்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா, அண்மையில் பாஜகவில் இணைந்தாா். அவருடன் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கட்சி தாவியதால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com