திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை மன்னர் குடும்பமே நிர்வகிக்கும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


புதுதில்லி/திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை நிர்வகிக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துக்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

அதுவரை இடைக்கால ஏற்பாடாக, திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான நிர்வாகக் குழு கோயில் விவகாரங்களை நிர்வகிக்க வேண்டும் எனவும் நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

நாட்டில் செல்வம் மிகுந்த கோயில்களில் ஒன்றாக கருதப்படும் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகித்து வந்தது. இந்நிலையில், கோயில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் 2011 ஜனவரி 31-ஆம் தேதி தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம், கோயிலை மாநில அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு கூறியது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணைக்குப் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இறுதித் தீர்ப்பு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. 

நீதிபதிகள் யு.யு.லலித், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பில் கூறியிருப்பதாவது: 

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த முந்தைய ஆட்சியாளரின் மரணம், கோயிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்ப கடைசி ஆட்சியாளரின் சகோதரரான மார்த்தாண்ட வர்மாவின் உரிமையைப் பாதிக்காது. அதேபோல, நிர்வாக குழுவைக் கட்டுப்படுத்தவும் மாநில அரசுக்கு உரிமை இல்லை. கோயில் நிர்வாகம் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்திடம் தொடர்ந்து இருக்கும். இடைக்கால ஏற்பாடாக கோயிலை நிர்வகிக்க திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

கேரள அரசு வரவேற்பு: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கேரள அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியது:

"பத்மநாபசுவாமி கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் நிர்வகிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாநில அரசு மரியாதை அளிக்கிறது, வரவேற்கிறது. தீர்ப்பை நாங்கள் இன்னும் விரிவாக ஆராய வேண்டியிருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவோம்' என்றார்.

மன்னர் குடும்பம் மகிழ்ச்சி: திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினரான கௌரி பார்வதிபாய் கூறியது: 

உச்சநீதிமன்ற தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளோம். எங்கள் குடும்பத்துக்காக மட்டுமன்றி அனைத்து பக்தர்களுக்காகவும் பத்மநாபசுவாமி வழங்கியுள்ள ஆசியாகவே தீர்ப்பைப் பார்க்கிறோம். இந்தக் கடினமான காலத்தில் எங்களுடன் துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

பக்தர்கள் குவிந்தனர்: உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து, பத்மநாபசுவாமி கோயில் முன்பு ஏராளமான பக்தர்கள் குவிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்; இனிப்புகளையும் பரிமாறிக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com