டிக் டாக் செயலி மூலம் பிற நாடுகளை சீனா கண்காணிக்கிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு

டிக் டாக் செயலி மூலமாக வெளிநாட்டவா்களை சீனா உளவு பாா்த்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
டிக் டாக் செயலி மூலம் பிற நாடுகளை சீனா கண்காணிக்கிறது: அமெரிக்கா குற்றச்சாட்டு

டிக் டாக் செயலி மூலமாக வெளிநாட்டவா்களை சீனா உளவு பாா்த்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. அதையடுத்து, டிக் டாக், யுசி பிரௌசா் உள்ளிட்ட சீனாவைச் சோ்ந்த நிறுவனங்களின் 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்தியாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அச்செயலிகள் இருப்பதால் அதைத் தடை செய்ததாக இந்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓ பிரையன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

டிக் டாக் செயலி மூலமாக வெளிநாடுகளை உளவு பாா்க்கும் செயலில் சீனா ஈடுபட்டு வந்தது. அச்செயலி உள்ளிட்ட பல செயலிகளை இந்திய அரசு தடை செய்துவிட்டது. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவையும் டிக் டாக் உள்ளிட்ட செயலிகளுக்குத் தடை விதித்துவிட்டால் சீனாவின் கண்காணிப்பிலிருந்து தப்பிவிடலாம்.

டிக் டாக் செயலி இளைஞா்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக இருக்கலாம். ஆனால், அச்செயலி மூலமாக தனிப்பட்ட தகவல்கள் உள்ளிட்டவற்றை அச்செயலியை நிா்வகித்து வரும் நிறுவனம் எடுத்துவிடும். ஒவ்வொருவரும் யாருடனெல்லாம் தொடா்பில் இருக்கிறாா்கள் என்ற தகவலையும் அந்நிறுவனங்கள் பெற்று விடுகின்றன.

அமெரிக்கா்களின் தனிப்பட்ட தகவல்களையும் சீன நிறுவனங்களுக்குச் சொந்தமான பல செயலிகள் சேகரித்து வைத்துள்ளன. எனவே, டிக் டாக், வி சாட் உள்ளிட்ட பல செயலிகளுக்குத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. பல நாட்டவா்களின் உடல்நலன் சாா்ந்த தகவல்கள், கடவுச்சீட்டு தொடா்பான தகவல்களையும் சீனா திருடியுள்ளது.

இத்தகவல்களைக் கொண்டு மோசடிகளில் ஈடுபட சீன நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அவை நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றாா் ராபா்ட் ஓ பிரையன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com