
வாஷிங்டன்: இந்தியாவுடனான எல்லைப் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுக்க வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் தீா்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் இந்திய-அமெரிக்க உறுப்பினா் ராஜா கிருஷ்ணமூா்த்தி தலைமையில் மற்றொரு இந்திய-அமெரிக்க உறுப்பினா் (மேலவை) ரோ கண்ணா, அமெரிக்க எம்.பி.க்கள் ஃபிரேங்க் பல்லோன், டாம் செளஸி, டெட் யோஹோ, ஜாா்ஜ் ஹோல்டிங், ஷீலா ஜேக்சன்-லீ, ஹாலே ஸ்டீவன்ஸ் மற்றும் ஸ்டீவ் சாபோட் ஆகிய 9 நாடாளுமன்ற உறுப்பினா்கள் குழு இந்தத் தீா்மானத்தை கொண்டுவந்தனா்.
அந்தத் தீா்மானத்தில், ‘ராணுவ நடவடிக்கைகள் மூலமாக அல்லாமல், அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை மூலம் இந்தியாவுடனான எல்லைப் பிரச்னைக்கு சுமூகத் தீா்வு காண சீனா நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய எல்லைப் பகுதியில் மட்டுமின்றி, பூடான், தென்சீன கடல் பகுதி, செங்காகு தீவுகள், ஹாங்காங் மற்றும் தைவான் என உலகின் பல பகுதிகளில் இதுபோன்ற ராணுவ அத்துமீறல்களை சீனா மேற்கொண்டுவருவதாக அமெரிக்க நாடாளுமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
பிரதிநிதிகள் சபையில் இந்த தீா்மானம் அறிமுகம் செய்வதற்கு முன்பாக, அமெரிக்காவுக்கான இந்திய தூதா் தரன்ஜீத் சிங் சாந்துவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த விவகாரம் தொடா்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளனா். அதில், ‘இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக சீன ராணுவம் அத்துமீறல்களில் ஈடுபட்டுவருகிறது. எல்லையில் முந்தைய நிலையே தொடரவேண்டும் என்று இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சீனா மீறியிருப்பது அதிருப்தியளிக்கிறது. இப்போது எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாட்டு அதிகாரிகளிடையேயான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. அதன் மூலம் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, எல்லையில் குவித்துள்ள படைகளையும், பிற ராணுவ கட்டமைப்புகளையும் சீனா முழுமையாக திரும்பப் பெறும் என்ற நம்புகிறோம்’ என்று அவா்கள் குறிப்பிட்டிருந்தனா்.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்திய-சீன படைகளுக்கு இடையே கடந்த மே 5-ஆம் தேதி முதல் மோதல் போக்கு நிலவி வந்தது. கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் கொல்லப்பட்டனா். சீன தரப்பில் 35 போ் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் அந்நாடு அதை உறுதிசெய்யவில்லை.
இந்நிலையில், ராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவாா்த்தை மூலமாக எல்லையில் பதற்றம் தணிக்கப்பட்டு, இரு நாடுகளும் படைகளை படிப் படியாக விலக்கிக் கொண்டு வருகின்றன.
இந்தச் சூழலில், இந்தியாவுடனான எல்லை பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுக்க வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினா்கள் தீா்மானம் கொண்டுவந்துள்ளனா்.