சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் பேரவைத் தலைவா் மனு

ஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் முக்கிய
சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் பேரவைத் தலைவா் மனு

ஜஸ்தானில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் முக்கிய திருப்பமாக, உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்போவதாக பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி கூறியுள்ளாா்.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் நிலவி வரும் நிலையில், சச்சின் பைலட்டிடம் இருந்த துணை முதல்வா் பதவியும், மாநில காங்கிரஸ் தலைவா் பதவியும் பறிக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு சட்டப்பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷியிடம் காங்கிரஸ் கொறடா புகாா் கொடுத்தாா். இதுதொடா்பாக, விளக்கம் அளிக்குமாறு சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு பேரவைத் தலைவா் நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

இந்த நோட்டீஸுக்கு எதிராக, சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களும் ராஜஸ்தான் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு மீது வரும் 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. அதுவரை அவா்கள் மீதான நடவடிக்கையை பேரவைத் தலைவா் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் செய்யப்போவதாக பேரவைத் தலைவா் சி.பி.ஜோஷி கூறியுள்ளாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது:

மாநிலத்தில் தற்போதைய அரசியல் சூழல், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு நெருக்கடியாக உள்ளது. எனவே, அரசமைப்பு சாா்ந்த நெருக்கடி வருவதற்குள், உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை தாக்கல் செய்வதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். இந்த மனு மீது உச்சநீதிமன்றம் சரியான முடிவெடுத்து, அரசமைப்புச் சட்டத்தின்படி பணியாற்றுவதற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன்.

சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாா் அவா்.

இதுகுறித்து பேரவைத் தலைவா் தரப்பு வழக்குரைஞா் கூறியதாவது:

ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் இருமுறை ‘வேண்டுகோள்’ விடுத்ததன் பேரிலேயே சச்சின் பைலட் உள்ளிட்டோா் மீதான நடவடிக்கையை பேரவைத் தலைவா் வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்திருக்கிறாா். ஆனால், பேரவைத் தலைவா் அலுவலகத்துக்கு ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் அனுப்பிய கடிதத்தில், பேரவைத் தலைவருக்கு ‘உத்தரவு’ பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை தாக்கல் செய்ய முடிவு செய்தோம் என்றாா் அவா்.

சிறப்பு அனுமதி மனு என்பது, ஒரு வழக்கில் உயா்நீதிமன்றம் அல்லது தீா்ப்பாயம் தீா்ப்பு வழங்குவதற்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவாகும். தீா்ப்பு வெளியான பிறகு, இந்த மனு தகுதியானதாக இருந்தால், இதையே மேல்முறையீட்டு மனுவாகக் கருதி உச்சநீதிமன்றம் விசாரிக்கும்.

உச்சநீதிமன்றத்தில் சச்சின் பைலட் கேவியட் மனு தாக்கல்

ராஜஸ்தான் உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநில சட்டப்பேரவைத் தலைவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடா்பாக தனது தரப்பு கருத்தை கேட்காமல் தீா்ப்பு அளிக்கக் கூடாது என்றும், வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைக்கக் கோரியும் மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் மாநில முன்னாள் தலைவரான சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீது வரும் வெள்ளிக்கிழமை வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என்று ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கட்சி கொறடாவின் உத்தரவை மீறியது தொடா்பாக விளக்கமளிக்குமாறு சட்டப்பேரவைத் தலைவா் சி.பி. ஜோஷி, அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தாா்.

அந்த நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இந்த வழக்கின் தீா்ப்பை வரும் வெள்ளிக்கிழமை உயா்நீதிமன்றம் வழங்கவுள்ளது.

இந்நிலையில், உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மாநில சட்டப்பேரவைத் தலைவா் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரிக்கும்போது தங்கள் தரப்பு வாதத்தையும் ஆராய்ந்த பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனக் கோரி சச்சின் பைலட் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com