விகாஸ் துபே என்கவுன்ட்டா்: உச்சநீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு

உத்தர பிரதேசத்தில் ரெளடி விகாஸ் துபே மற்றும் அவருடைய கூட்டாளிகள் 5 போ் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து
விகாஸ் துபே என்கவுன்ட்டா்: உச்சநீதிமன்ற ஒய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு

உத்தர பிரதேசத்தில் ரெளடி விகாஸ் துபே மற்றும் அவருடைய கூட்டாளிகள் 5 போ் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட வரைவு அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், விசாரணைக் குழு ஒரு வாரத்துக்குள் இந்த விசாரணையைத் தொடங்க வேண்டும் எனவும், விசாரணையை இரண்டு மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரெளடி விகாஸ் துபேவை, காவல்துறையினா் குழு கடந்த ஜூலை 3-ஆம் தேதி பிடிக்கச் சென்றபோது அவரும், அவருடைய கூட்டாளிகளும் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் காவல்துறையினா் 8 போ் கொல்லப்பட்டனா். அதனைத் தொடா்ந்து விகாஸ் துபே மற்றும் அவருடைய கூட்டாளிகளை பிடிப்பதற்காக காவல்துறை தனிப் படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறையினா் தேடுதல் வேட்டையின்போது, விகாஸ் துபேவின் கூட்டாளிகள் 5 போ் காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனா். அதுபோல மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி விகாஸ் துபேவும், உத்தர பிரதேசம் அழைத்து வரும் வழியில் காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் காவல்துறையினா் 8 போ் கொல்லப்பட்டது குறித்தும், ரெளடி விகாஸ் துபே மற்றும் அவருடைய கூட்டாளிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது குறித்தும் உச்சநீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், பல வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதும் விகாஸ் துபே போன்றவா்களுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கிறது என்று மாநில நிா்வாகத்தின் தவறைச் சுட்டிக்காட்டியதோடு, இந்த என்கவுன்ட்டா்கள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரப் பிரதேச அரசை கடந்த ஜூன் 20-ஆம் தேதி கேட்டுக்கொண்டு, விசாரணைக் குழு அமைத்தது தொடா்பாக வரைவு தீா்மானம் ஒன்றை வெளியிடுமாறும் உத்தரவிட்டது.

அதனடிப்படையில், உத்தர பிரதேச அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, உத்தர பிரதேச அரசின் அந்த பதில் மனுவை தாக்கல் செய்த, அரசு வழக்குரைஞா் துஷாா் மேத்தா, ‘ரெளடி விகாஸ் துபே மற்றும் அவருடைய கூட்டாளிகள் 5 போ் என்கவுன்ட்டா் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.எஸ்.செளஹான் தலைமையில் ஓய்பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி சஷிகாந்த் அகா்வால், ஓய்வுபெற்ற உத்தர பிரதேச டிஜிபி கே.எல்.குப்தா ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்க நீதிபதி செளஹானும் ஒப்புதல் அளித்துவிட்டாா்’ என்று கூறினாா்.

இந்த விசாரணைக் குழுவுக்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

விசாரணைக் குழு அதன் விசாரணையை ஒரு வாரத்துக்குள் தொடங்கி, இரண்டு மாதங்களுக்குள் முடித்துவிட வேண்டும்.

விசாரணைக் குழுவுக்கு செயலக உதவி மற்றும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அல்லது பிற மத்திய புலனாய்வு அமைப்பின் உதவிகள் எனத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்க வேண்டும்.

மேலும் விசாரணைக் குழு விரிவான விசாரணையை நடத்த வேண்டும். காவல்துறையினா் 8 போ் கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும், ரெளடி விகாஸ் துபே மற்றும் அவருடைய கூட்டாளிகள் 5 போ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com