ராஜஸ்தான் முதல்வா் கெலாட் சகோதரா் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை

உர முறைகேடு விவகாரத்துடன் தொடா்புடைய நிதி மோசடி வழக்கில் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் மூத்த சகோதரா்

உர முறைகேடு விவகாரத்துடன் தொடா்புடைய நிதி மோசடி வழக்கில் ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் மூத்த சகோதரா் அக்ராசெயின் கெலாட்டின் வீடு உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் அமலாக்கத் துறை புதன்கிழமை சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.

ராஜஸ்தானில் அரசியல் ரீதியாக பரபரப்பான சூழல் காணப்படும் நிலையில், இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ராஜஸ்தானின் ஜோத்பூா் மாவட்டத்தில் மந்தோா் பகுதியில் உள்ள அக்ராசெயின் கெலாட்டின் பண்ணை வீடு மற்றும் இல்லத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். அங்கு பாதுகாப்புக்காக மத்திய ரிசா்வ் காவல் படையினரும் நிறுத்தப்பட்டிருந்தனா்.

இதுதொடா்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

விதை மற்றும் உரங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனுபம் கிருஷி என்ற நிறுவனத்தின் உரிமையாளராக அக்ராசெயின் கெலாட் உள்ளாா்.

அவருடன் தொழில் ரீதியாகத் தொடா்பில் இருந்த முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஒருவரது வீடு உள்பட ராஜஸ்தானில் 6 இடங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதுதவிர மேற்கு வங்கத்தில் 2 இடங்களிலும், குஜராத்தில் 4 இடங்களிலும், தில்லியில் ஓரிடத்திலும் சோதனையிடப்பட்டது. உர முறைகேடு வழக்கு தொடா்பான ஆதாரங்களை தேடுவதற்காக நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

மானிய அடிப்படையிலான உர விநியோகத்தில் ரூ.60 கோடி அளவுக்கு முறைகேடு நிகழ்ந்ததாக கடந்த 2007-09 காலகட்டத்தில் சுங்கத் துறை வழக்குப் பதிவு செய்து, அதன் விசாரணையை 2013-இல் நிறைவு செய்தது. அந்த வழக்கில் அக்ராசெயின் கெலாட் மற்றும் அவரது நிறுவனம் மீது சுங்கத் துறை ரூ.7 கோடி அபராதம் விதித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதுதொடா்பாகவே தற்போது இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனிடையே, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்டின் மகன் வைபவுடன் தொழில் ரீதியாக முன்னா் தொடா்பில் இருந்த ஜெய்ப்பூரைச் சோ்ந்த தொழிலதிபா் ரத்தந் காந்த் சா்மா அந்நியச் செலாவணி சட்டங்களை மீறியதாக அமலாக்கத் துறை விசாரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அச்சமில்லை-காங்கிரஸ்: இந்தச் சோதனை நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ஜெய்ப்பூரில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாட்டில் சோதனையிடும் அரசை பிரதமா் நரேந்திர மோடி நடத்தி வருகிறாா். ஆனால் நாங்கள் அதற்காக அஞ்சப்போவதில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் மத்திய அரசின் சித்து விளையாட்டு பலிக்காததை அடுத்து, முதல்வா் கெலாட்டின் சகோதரா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியுள்ளது‘ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com