
கணவரைக் கொன்றவர்களை ரூ.70 லட்சத்துக்கு கூலிப்படை வைத்துக் கொல்ல முயன்ற பெண் தலைமறைவு
பெங்களூரு: கணவரைக் கொலை செய்தவர்களை கூலிப்படை அமைத்து கொல்ல முயன்ற பெண்ணை பெங்களூரு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கணவரைக் கொலை செய்தவர்களை பழிக்குப் பழி வாங்க, 9 பேர் அடங்கிய கூலிப்படை அமைத்து, கொல்ல முயன்ற முன்னாள் தொழிலதிபரான 50 வயது பெண் தலைமறைவாக உள்ளார். "இதுவரை வரலட்சுமியை கைது செய்யவில்லை. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது" என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலட்சுமியின் கணவர் கௌடா 2017ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற குமார் - நடராஜ் என்ற சகோதரர்களைக் கொலை செய்ய வரலட்சுமி முடிவு செய்தார்.
முன்னதாக, 2016ல் இந்த சகோதரர்களின் மற்றொரு சகோதரர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் கௌடாவும், வரலட்சுமியும் கைது செய்யப்பட்டனர். இதற்கு பழிவாங்கவே கௌடாவை சகோதரர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்காக, 9 பேர் கொண்ட கூலிப்படைக்கு 70 லட்சம் கொடுக்க வரலட்சுமி பேரம் பேசியுள்ளார். முன்னதாக ரூ.4 லட்சத்தை முன்பணமாகவும் அளித்துள்ளார்.
வாகன சோதனையின் போது கூலிப்படையினரை காவல்துறையினர் கைது செய்த போது இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளது.