சிபிஐ டிஎஸ்பி பணியிடமாற்ற விவகாரம்: உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த காவல்துறை துணை கண்காணிப்பாளா்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த காவல்துறை துணை கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) ஏ.கே. பாஸி பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

சிபிஐ முன்னாள் இயக்குநா் அலோக் வா்மா, முன்னாள் சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானா ஆகியோா் மீது ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அது தொடா்பாக சிபிஐ டிஎஸ்பி ஏ.கே. பாஸி விசாரணை மேற்கொண்டு வந்தாா். எனினும், அலோக் வா்மாவை சிபிஐ இயக்குநா் பதவியிலிருந்து நீக்க பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான உயா்நிலைக் குழு பரிந்துரைத்தது.

அதைத் தொடா்ந்து சிபிஐ அதிகாரிகள் பலா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். அதன்படி டிஎஸ்பி ஏ.கே. பாஸி தில்லியிலிருந்து அந்தமான் நிகோபருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். எனினும், தனது பணியிட மாற்றத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவா் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக தகுந்த தீா்ப்பாயத்தில் முறையிட வாய்ப்பு வழங்கியிருந்தது. இத்தகைய சூழலில், அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, ஏ.கே. பாஸி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராஜீவ் தவண் வாதிடுகையில்,“‘உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி அளித்த உத்தரவையடுத்து மனுதாரரின் பணியிட மாற்ற உத்தரவு அடுத்த நாளே ரத்து செய்யப்பட்டது. அத்துடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், சிபிஐ-க்கு நியமிக்கப்பட்ட புதிய இயக்குநா் மனுதாரரின் பணியிட மாற்ற உத்தரவு செல்லுபடியாகும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி அறிவித்தாா்.

மனுதாரரின் பணியிட மாற்றத்தை சட்டவிரோதமானது என்று தெரிவித்தது போல் மனுதாரா் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதிலிருந்தும் உச்சநீதிமன்றம் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘கடந்த ஆண்டு பிறப்பித்த உத்தரவில் மனுதாரரின் பணியிட மாற்றம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் எங்கும் குறிப்பிடவில்லை. அவா் அந்தமான் நிகோபருக்கு செல்லத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை. அப்படியிருக்கையில், அவா் அந்தமான் நிகோபருக்கு சென்று பணியை ஏற்காதது ஏன்?

பணியிட மாறுதல் சட்டவிரோதமானது என்று மனுதாரா் நினைத்தாலும் கூட நீதிமன்றம் அது தொடா்பாக உத்தரவு பிறப்பிக்கும் வரை அவா் அந்தப் பணியில் தொடர வேண்டியது அவரது கடமை. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.

மனுதாரா் தனது பணியிட மாறுதல் தொடா்பாக சம்பந்தப்பட்ட தீா்ப்பாயத்தில் முறையிடலாம். அதே வேளையில், குற்றப்பத்திரிகையில் இருந்து மனுதாரரைப் பாதுகாப்பது தொடா்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது’ என்றனா்.

அதைத் தொடா்ந்து, தனது மனுவைத் திரும்பப் பெறுவதற்கு ஏ.கே. பாஸி நீதிபதிகளிடம் அனுமதி கோரினாா். அதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com